பக்கம் எண் :

126என் சரித்திரம்

பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப்
பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம்
வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள்.
மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில்
வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள்.
கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.
தேங்காயை எடுத்துக் கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான்
ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறு
பையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக் கொண்டு
போய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக்
கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர் பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள்
கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.

நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும்
ஊரினரிலும் அனைவரும் வர வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய
மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து
ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.

விநோத நிகழ்ச்சிதான்

எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப்
பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு
பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை.
எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான்
கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப்
பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு
விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான
சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டி வைத்து
வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.

எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்கு முன் சிவாலயத்தில்
எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறை பணி நடைபெற்றது. விநாயக
மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள்.
அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக
ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக் கொணர்ந்து வைத்து
அருகில்