பக்கம் எண் :

ஏக்கமும் நம்பிக்கையும் 131

அன்னையார் கம்பஞ் சாதம் உண்டது

ஒருநாள் என் தாயார் உண்ணும்போது நான் கவனித்தேன். அவர்
இலையில் இருந்த உணவு புதியதாகத் தோற்றியது; அவர் கம்பஞ் சாதத்தை
உண்டுகொண்டிருந்தார். நெல்லின் அருமையை உணர்ந்த அவர் எனக்கும் என்
தந்தையாருக்கும் நெல்லரிசியுணவை அளித்துத் தாம் மட்டும் கம்பஞ்
சாதத்தைச் சில நாட்களாக உண்டு வந்தாரென்பது தெரிய வந்தது.

“ஏன் அம்மா இப்படிச் செய்கிறாய்?” என்று நான் கேட்டேன்.

“கம்பு உடம்புக்கு நல்லதுதானே? அதை நெல்லுக்காக மாற்றுவது
ஏனென்றெண்ணி இப்படிச் செய்கிறேன்.”

“அப்படியானால் எங்களுக்கு மாத்திரம் அரிசிச் சாதம் போடுகிறாயே?”

என் அன்னையாருக்கு விடை கூற வழியில்லை. அப்பால் என்னுடைய
வேண்டுகோளுக்கு இணங்கி அவரும் எங்களைப்போல அரிசிச் சாதம் உண்ண
ஆரம்பித்தார்.

இராகவையரிடம் பாடம் கேட்டது

ஐப்பசி மாதம் தீபாவளி வந்தது. எனக்குத் தலைத் தீபாவளியாதலால்
என் மாமனாருடைய அழைப்பின்மேல் நானும் என் தாய் தந்தையரும்
உத்தமதானபுரம் சென்றோம். மாளாபுரத்தில் தீபாவளிப் பண்டிகை நடந்தது.
அதனுடன் ஆறு மாதமும் நடந்தது. தீபாவளிக்காக ஏழு ரூபாய்க்கு ஜரிகை
வாஸ்திரமும் ஆறாம் மாதத்திற்காகப் பதினான்கு ரூபாயும் கிடைத்தன. அதற்கு
முன் நான் கையில் வெள்ளிக் காப்பை மட்டும் அணிந்திருந்தேன். என் தாயார்
விருப்பத்தின்படி அந்தப் பதினான்கு ரூபாய்க்கும் வெள்ளிச் சங்கிலி செய்து
எனக்கு அணிவித்தார்கள். தீபாவளியான பிறகு என் தந்தையாருக்கு ஜ்வரம்
வந்தமையின் ஆறுமாத காலம் உத்தமதானபுரத்திலேயே தங்க நேர்ந்தது.

அக்காலத்தில் பாபநாசத்தில் சிறு பள்ளிக்கூடம் ஒன்றின்
உபாத்தியாயராக இராகவையர் என்பவர் இருந்தார். அவர் தமிழ் நூல்களைக்
கற்றவர். கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த தியாகராச
செட்டியாரிடத்திலும் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களிடத்திலும்