பக்கம் எண் :

14என் சரித்திரம்

அவருக்கு என் தந்தையாரிடம் மிகுந்த அன்பு இருந்தது. தம்முடைய
மரணகாலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்பி அங்ஙனமே
இருக்கச் செய்தார். இடையே சில மாதங்கள் என் தந்தையார் சிறிய
தந்தையாருடன் வெளியூருக்குச் சென்றிருந்த போது என் பாட்டனார் மிகவும்
கலக்க மடைந்திருந்தார். ஒவ்வொரு நாளும் என் தகப்பனாரது வரவை
எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து
வந்துவிட்டாரென்றும், தெருக்கோடியில் வருகிறாரென்றும் தெரிந்தபோது
மனத்தினுள் இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது; என்னைக் கூப்பிட்டு, “சாமா,
உங்கப்பா வந்துட்டாண்டா!” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தார்.
தாயைப் பிரிந்திருந்த குழந்தை மீட்டும் தாயைக் காணும்பொழுது
அழுவதுபோல இருந்தது அது. அன்பு எந்த உருவத்தில் இருந்தால் தான்
என்ன? பிரிவினால் பெரிய துக்கத்தை உண்டாக்குவதில் எல்லாம் ஒன்றுதான்.

முதிய பருவத்தில் தம்முடைய மனைவியை இழந்த வருத்தத்தாலும்
பிள்ளையை அடிக்கடி பிரிவதனால் உண்டாகும் துயரினாலும் அவருக்கு
மனக்கலக்கம் இருந்தே வந்தது. தம்மை ஒருவரும் சரியாகக் கவனிக்கவில்லை
என்ற எண்ணமும் இருந்தது. அவருக்கு இன்ன இன்ன வேண்டுமென்பதை என்
தாயாருக்கு அறிவிக்கும் தூதனாக நான் இருந்தேன். என் பாட்டனாருக்குத்
தூது செல்லும் உத்தியோகத்தினால் எனக்கு, ‘கத்தாரிக்காய்த் தொகையல்’
என்று இளமையில் ஒரு பெயர் கிடைத்தது. அதற்குத் தாத்தாவே காரணம்.

தாத்தா காலையில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில்
வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். தகப்பனார் ஊரில் இல்லாத
காலம் அது. என் தாயார் என்ன சமையல் செய்வதென்று தாத்தாவைக் கேட்டு
வரும்படி என்னை அனுப்புவார். அக்காலத்தில் எனக்கு ஆறு பிராயம்
இருக்கும்.

நான் போய், “இன்றைக்கு என்ன சமையல் செய்கிறது?” என்று
கேட்பேன்.

அவர், “சமையலா,,,,,,,,,” என்று நீட்டுவார். அவருக்கு எல்லாம்
வெறுப்பாகத் தோற்றும். “சமையல் தானே? மண்ணாங்கட்டி, தெருப் புழுதி,
சாம்பல் கொழுக்கட்டை” என்பார். அவருக்கு இந்த உலகத்திலே உள்ள
வெறுப்பின் அடையாளம் அந்த வார்த்தைகளென்று எனக்கு அப்போது
தெரியாது.

குடுகுடுவென்று ஓடிப் போய்த் தாயாரிடம் தாத்தா சொன்னதை
அப்படியே ஒப்பிப்பேன். “போடா பைத்தியம்! என்ன