பக்கம் எண் :

செங்கணத்தில் வாசம் 143

மாத்திரம் ரெட்டியாரால் சொல்ல இயலவில்லை. ஆதலின் அவ்
விஷயத்தில் சந்தேகம் இருந்தது. இடையிடையே வரும் மேற் கோள்களில்
ஜைன சமயத் தொடர்புடைய பாடல்கள் பல. அவற்றில் அச்சமய சம்பந்தமான
சில செய்திகளை அவர் விளக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற எல்லாம்
தெளிவாகவும் அழுத்தமாகவும் என் அறிவில் பதிந்தன. அந்த அஸ்திவார
பலம் இன்னும் இருந்து வருகிறது. இலக்கணமென்றால் கடினமானதென்ற
நினைவே இல்லாமல் சுலபமாகவும் மனத்துக்கு உத்ஸாகமுண்டாகும்
வண்ணமும் ரெட்டியார் பாடம் சொன்ன முறையை நான் என்றும் பாராட்டக்
கடமைப்பட்டுள்ளேன் அவரிடம் நான்கு மாதங்கள் நான் பாடம் கேட்டேன்.
ஆயினும் என் வாழ்வு முழுவதும் அப்பாடம் பயன்பட்டு இன்பம்
தருவதாயிற்று.

அத்தியாயம்-25

செங்கணத்தில் வாசம்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலையர்,
கருணைப் பிரகாசர் இவர்களுடைய பரம்பரையினரும் உறவினரும்
அப்பக்கங்களில் பல கிராமங்களில் பள்ளிக்கூடம் வைத்திருந்தார்கள்.
அவர்கள் யாவரும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்கள். நல்ல பாடல்களை
மனனம் செய்து அவற்றை உரிய சந்தர்ப்பங்களிற் சொல்லி எல்லோரையும்
மகிழ்வித்துப் பயன் பெறுவார்கள். அவர்களும் வேறு சில வித்துவான்களும்
அடிக்கடி செங்கணத்திற்கு வந்து விருத்தாசல ரெட்டியாரிடம் சம்பாஷணை
செய்து சில நாட்கள் தங்கியிருந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்
கொண்டும் பொருளுதவி பெற்றும் செல்வார்கள். சில வித்துவான்கள்
ரெட்டியாருடைய சந்தேகங்களையும் தீர்ப்பதுண்டு.

தனிப்பாடல் திரட்டு

இவ்வாறு வருபவர்களுடைய சம்பாஷணையால் எனக்குத் தமிழ் லாபம்
இருந்தது. அவர்கள் கூறும் தனிப்பாடல்கள் மிக்க சுவையுள்ளனவாக இருக்கும்.
அவற்றைக் கேட்டு நான் பாடம் செய்து கொள்வேன். தனியே எழுதி
வைத்துக்கொள்வேன். இப்படி ஒவ்வொரு பாடலாக நான் கேட்டுத்
தெரிந்துகொள்வதை அறிந்த ரெட்டியார் ஒரு நாள், “என்னிடம் தனிப்பாடல்
திரட்டு இருக்கிறது. அதில் பல பாடல்கள் உள்ளன. நான் உமக்குத் தருகி