கவனியும்” என்றார். நான் சிலமுறை படித்தேன்; ஓசை சரியாக இல்லை என்பது எனக்கு ஓரளவு தெரிந்தும் அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை; “ஆறு சீர்கள் இல்லையா?” என்றேன். “ஆறு சீர்கள் இருக்கின்றன என்பது வாஸ்தவந்தான். ஆனால் எந்தச் சீர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. அதனால்தான் ஓசை பிறழ்கிறது” என்று கூறிப் பிரபுலிங்க லீலை என்றும் தமிழ் நூலை எடுத்துச் சில பாடல்களைப் படித்துக் காட்டினார் நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்து கொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப் பெருமாளையர் பின்வருமாறு விளக்கினார்: “முதல் அடியில் முதற்சீர் மாச்சீராக இருந்தால் மற்ற அடிகளிலும் முதற்சீர் மாச்சீராகவே இருக்கும். இதோ இப்பாட்டைப் பாரும்: “பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன் கைகான் முடங்கு பொறியிலிதன் நாவா யொழுகிற் றெனவுலக மளந்த மாலு நான்முகனும் காவா யெனநின் றேத்தெடுப்பத் தானே வந்தெங் கரதலத்து மேவா நின்ற மாமணியைத் தொழுது வினைக்கு விடைகொடுப்பாம்” என்பதில் ஒவ்வோரடியிலும் ஆறு சீர்கள் இருக்கின்றன. முதல் இரண்டு சீரும் நான்கு ஐந்தாம் சீர்களும் மாச்சீர்கள்; மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச் சீர்கள். இந்த அமைப்பு ஒவ்வோரடியிலும் மாறாமல் நிற்கும்; மாறினால் ஓசை கெடும். இவ்வண்ணம் சீர்கள் அமைவதனால்தான் ஒவ்வொரு வகை விருத்தத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன.” அவர் விரிவாக எடுத்துச் சொன்னபோது தான் எனக்கு விஷயம் விளங்கிற்று. “புஸ்தகத்தைப் படித்துப் பார்ப்பதனால் மட்டும் ஒருவனுக்குப் பூரண அறிவு ஏற்படாது; அறிந்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும்” என்று பெரியோர்கள் வற்புறுத்துவதன் உண்மையையும் உணர்ந்தேன். இத்தகைய அரிய விஷயங்களைத் தக்கவர் |