பக்கம் எண் :

மாயூரப் பிரயாணம் 151

என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே
போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர
ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக
இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற் கொண்டு
போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். ரெட்டியாரிடம்
தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தை விட்டுப் புறப்படச்
சித்தமாயினர்.

அத்தியாயம்-26

மாயூரப் பிரயாணம்

செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருஷம் மார்கழி மாதமுதல்
பங்குனி வரையில் (1870 டிசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம்.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகபட்டின புராணம்
அரங்கேற்றிப் பூர்த்தி செய்து கொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும்
மாயூரத்திற்கே வந்து விட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்
பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய
கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த
செய்திகளெல்லாம் ஒருங்கே என் ஞாபகத்துக்கு வந்தன. உத்தமதானபுரம்
பள்ளிக்கூட உபாத்தியாயராகிய சாமிநாதையர் முதல் செங்கணம் விருத்தாசல
ரெட்டியார் வரையில் யாவரும் அவ்வப்போது சொன்ன விஷயங்களால் என்
மனத்துக்குள்ளே பிள்ளையவர்களைப் போல ஓர் உருவத்தைச் சிருஷ்டி செய்து
கொண்டேன். ஆசிரியர்களுக்குள் சிறந்தவர், கவிகளுக்குள் சிகாமணி, குணக்
கடல் என்று அவரை யாரும் பாராட்டுவார்கள். அவர் எனக்குப் பாடம்
சொல்லுவது போலவும், நான் பல நூல்களைப் பாடம் கேட்பது போலவும்,
என்னிடம் அவர் அன்பு பாராட்டுவது போலவும் பாவனை செய்து
கொள்வேன்; கனாவும் காண்பதுண்டு.

செங்கணத்தினின்றும் புறப்பட்டது

நல்ல நாளில் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடம் விடை
பெற்றுச் செங்கணத்திலிருந்து நாங்கள் புறப்பட்டோம். அந்தப் பக்கங்களில்
எங்கள் குடும்ப நன்மையிலும், என் கல்வி