உத்தமதானபுரம் வந்தது அப்பால் அவ்வூரிலிருந்து புறப்பட்டுப் பெரிய திருக்குன்றம் வந்து சில நாள் தங்கிப் பிறகு உத்தமதானபுரம் சென்றோம். உத்தமதானபுரத்திலிருந்து அப்பால் மாயூரம் செல்ல வேண்டியது தான். இந்த நிலையில் அதுகாறும் என்னைப் பிரிந்திராத என் பெற்றோர்கள் நான் தனியே மாயூரத்தில் இருக்க வேண்டுமே என்பது பற்றிக் கவலை கொள்ளத் தொடங்கினர். “நம்முடைய கால நிலை இப்படி இருக்கிறது. குழந்தையை விட்டு நான் எப்படித் தனியே இருப்பேன்! இவனுக்கு வேண்டிய ஆகாரத்தை அங்கே பிரியத்துடன் யார் செய்து போடுவார்கள்? இவனுக்குத் தன் கையாலேயே எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடத் தெரியாதே!” என்று என் தாயார் வருந்தினார். “என்ன செய்வது! நம்முடைய கால வித்தியாசம் இப்படி இருக்கிறது. இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலக்ஷேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போய் இருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் போய் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள ஜனங்களைப் போல நகர வாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே! தவிர, அரியிலூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள் என்னிடம் அபிமானமுள்ளவர்கள். மாயூரத்தில் அப்படி யார் இருக்கிறார்கள்? இவனுக்கே ஆகாரம் முதலிய சௌகரியங்கள் கிடைக்குமோ வென்று சந்தேகப்படுகிறேன். அவற்றிற்கு வேண்டிய ஏற்பாடு செய்யப் பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது!” என்று என் தந்தையார் வருந்தினார். மந்திரோபதேசம் “ஈசுவர சகாயம் இருந்தால் எல்லாம் கை கூடும” என்ற கொள்கையையுடைவர் என் தந்தையார். சிவ பூஜை, மந்திர ஜபம் முதலியவைகளில் அவருக்கு நம்பிக்கை அதிகம். எனக்குச் சில மந்திரங்களைத் தக்கவர்களைக் கொண்டு உபதேசம் செய்விக்க வேண்டுமென்று அவர் கருதினார். உத்தமதானபுரத்திற்கு வடக்கிலுள்ள தியாக சமுத்திரமென்னும் ஊரில் நீலகண்டையரென்பவர் கிராமக் கணக்கு வேலை பார்த்து வந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர் சங்கீதப் பயிற்சி உடையவர். கனம் |