பக்கம் எண் :

16என் சரித்திரம்

அவர் சொல்லும் சமாசாரங்களை என் தாயாரிடம் சொல்லும் வேலை
எனக்கு அடிக்கடி நேரும். இந்த ஸம்பாஷணையைக் கேட்டிருக்கும்
அயலார்கள் எனக்கு அந்தப் பெயரை வைத்துவிட்டார்கள்.

அந்தக் காலத்தில் பெண்களுடைய நிலைதான் மிகவும் கஷ்டமானதாக
இருந்தது. மாமனார், மாமியார் நாத்தனார் முதலியவர்களால் அவர்கள் படுங்
கஷ்டங்கள் பெரும்பாலான வீடுகளில் உண்டு. மற்ற எல்லா விஷயங்களிலும்
அக்கால வாழ்க்கை சிறந்ததாக இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம்
குறைபாடாகவே இருந்தது.

எங்கள் பாட்டனார் அடிக்கடி கூறும் குறைகளைக் கேட்டுக் கொண்டு
என் தாயார் மிக்க பொறுமையுடன் இருந்து வந்தார். ஒருநாள் என்னையும்
அழைத்துக் கொண்டு ஓர் ஊருக்குச் செல்லுகையில் இடையே மணஞ்
சேரியென்னும் கிராமத்தில் தங்க நேர்ந்தது. அப்பொழுது மாலை நேரம்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் தாவளியைப் போர்த்துக்கொண்டு
ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவர் சந்தியாவந்தனம் செய்வதற்காகத்
தீர்த்தம் கொண்டு வரும்படி தம் பேரனை ஏவினார். அவன் பஞ்ச
பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு வந்து வைத்துவிட்டு உத்தரணியைக்
காணவில்லை என்றான். கிழவருக்குக் கோபம் வந்து விட்டது. ’’போய்
நான்னாத் தேடிப் பாரு. அவள் அங்கே வெந்நீரடுப்புக்குள்ளே சாம்பல்லே
செருகியிருப்பா, பாரு’’ என்று சொல்லும் போதே அந்தத் தொனியிலே அவர்
சினம் வெளிப்பட்டது. ‘அவள்’ என்றது அவருடைய மருமகளைத் தானென்பது
நிச்சயம்.

அவர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் காதிலும் விழுந்தன; ‘’ஓகோ!
அங்கேதான் இருக்கிறீரென்று நினைத்தேன்; இங்கேயும் இருக்கிறீரா?” என்று
என் தாயார் அப்போது கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருவத்தில்
எனக்குப் பொருள் விளங்கவில்லை; பிறகு விளங்கியது. அந்த வீட்டிலும்
மருமகளைக் குறை கூறும் முதிய மாமனார் இருப்பதில் என் தாயாருக்கு ஓர்
ஆறுதல் உண்டாயிற்றென்றே எண்ணுகிறேன். இது மனித சுபாவந்தானே?

எங்கள் ஊரில் சிலர் முதிய பிராயத்தில் சந்நியாஸம் வாங்கிக் கொண்டு
சில காலம் இருந்து பிறகு சித்தியடைந்தார்கள். பிறகு அவர்கள் ஓரிடத்தில்
சமாதியில் வைக்கப்பட்டார்கள். அவ்வாறுள்ள சமாதிகள் சில. ஆனால் அவை
பாதுகாக்கப்படவில்லை. சில முதிய ஸ்திரீகள் அந்த இடத்தில் சாணி தட்டி
உலர்த்துவார்கள்.