பக்கம் எண் :

பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 163

பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படி யிருந்தால் இவ்வளவு
பிரியமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

தவம் பலித்தது

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம்
இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.
தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான்.
தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான்
உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம்
சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி
வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம்
அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான்
தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்து
விட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும்
இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே
பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது
சொன்னேன்; வேண்டிக் கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது;
முகம் ஒளி யிழந்தது.

அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது
பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப்
படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று
கூறினார்கள்.

அக் கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர்
வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான்
இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது.

“இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களோ? இவருடைய
ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?” என்று
பிள்ளையவர்கள் கேட்டனர்.

“இவ்வூரில் நண்பர்களும் பந்துக்களும் இருந்தாலும் அவர்கள்
செல்வமுள்ளவர்களல்ல. அவர்களுக்குச் சிரமம் கொடுப்பது உசிதமாக இராது.
தாங்களே ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார் என் தந்தையார்.
பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களை வைத்துப் போஷித்துப் பாடம் சொல்லி
வருகிறார் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டிருந்தமையின் இவ்வாறு
எந்தையார் சொன்னார்.