பக்கம் எண் :

தளிரால் கிடைத்த தயை 179

நாரத்தை, மா, முதலிய மரங்களின் பெரிய செடிகளை வேரோடு மண்
குலையாமல் தோண்டி எடுத்து அம்மண்ணின் மேல் வைக்கோற்புரி சுற்றி
வருவித்து ஆழ்ந்த குழிகளில் நட்டு வளர்ப்பது அப்பக்கங்களில் உள்ள
வழக்கம். என் ஆசிரியரும் அவ்வாறு சில செடிகளை வருவித்துத்
தோட்டத்தில் வைத்திருந்தார். நான் அவரிடம் பாடம் கேட்க வந்தபோது இந்த
ஏற்பாடு நடந்து வந்தது.

தளிர் ஆராய்ச்சி

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர்
தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவைகளில் ஏதாவது
பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது
தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது
தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய
தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டு
விட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே இராது.
வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி
சொல்லுவார். மாலை வேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்கு
ஜலம் விடுவார்.

அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை
நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும்
உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத்
துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்க
வில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில்
ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள்
உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே
சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத்
தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக்
கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது”
என்றேன்.

அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை;
என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின
இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோஷமடைந்தார்.
பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய்