பக்கம் எண் :

190என் சரித்திரம்

இருப்போம். வந்தவர்களோடு பேசிக் கொண்டே இருக்கையில் பல
விஷயங்கள் அவர் வாக்கிலிருந்து வரும். எல்லாம் மிகவும்
உபயோகமானவைகளாகவே இருக்கும். எங்கள் ஆசிரியர் அவர்களுக்கும்
எங்களுக்கும் பழக்கம் பண்ணி வைப்பார். ஏதாவது பாடலைச் சொல்லச்
சொல்லுவார்; பொருளும் சொல்லும்படி செய்வார் நான் ராகத்துடன் பாடல்
சொல்வதனால் அடிக்கடி என்னைச் சொல்லும்படி ஏவுவார். இத்தகைய
பழக்கத்தால் பல பேருக்கிடையில் அச்சமில்லாமல் பாடல் சொல்லும் வழக்கம்
எனக்கு உண்டாயிற்று; பாடல்களுக்கு அர்த்தம் சொல்லும் பழக்கமும்
ஏற்பட்டது.

ஒரு நாள் தர்மதானபுரம் கண்ணுவையர் என்ற வித்துவானொருவர்
வந்தார். அவர் பாரதப் பிரசங்கம் செய்வதிற் புகழ் வாய்ந்தவர். அங்கங்கே
வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தைப் பிரசங்கம் செய்து சம்மானம் பெற்று ஜீவனம்
செய்து வந்தார். அவர் பிள்ளையவர்களிடம் அபிமானமுடையவர். அவர் வந்த
காலத்தில் பாரதத்திலிருந்து இசையுடன் செய்யுட்களைக் கணீரென்று சொல்லிப்
பிரசங்கம் செய்தார். அத்தகைய பிரசங்கத்தை முன்பு நான்
கேட்டதில்லையாதலின் அப்போது எனக்கு ஒரு புதிய இன்பம் உண்டாயிற்று.

மற்றொரு நாள் சபாபதி ஐயர் என்ற ஒரு வித்துவான் வந்தார். அவர்
எழும்பூர் திருவேங்கடாசல முதலியாரிடம் பாடம் கேட்டவர். அவர்
இராமாயணப் பிரசங்கம் செய்பவர். கூறை நாட்டில் உள்ள சாலிய கனவான்கள்
விருப்பத்தின்படி தினந்தோறும் கம்ப ராமாயணம் படித்துப் பொருள் சொல்லி
வந்தார். அவர் வந்த காலத்தில் பிள்ளையவர்களிடம் கம்ப ராமாயணத்தைப்
பற்றி நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்; சில சந்தேகங்களையும் தீர்த்துக்
கொண்டார்.

இவ்வாறு வரும் வித்துவான்களுடைய சம்பாஷணையால் உண்டான
லாபம் வேறு எங்களுக்குக் கிடைத்தது. வந்து செல்லும் வித்துவான்களும்
பிரபுக்களும் நாங்கள் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு வருவது தெரிந்து
எங்களிடம் பிரியமாகப் பேசி அன்பு பாராட்டத் தொடங்கினர்.
அப்பொழுதிருந்த மாணாக்கர்களுள் பிராயத்தில் சிறியவன் நானே; ஆதலின்
அவர்கள் என்னிடம் அதிகமான அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இப்படி என்னுடைய குருகுல வாசத்தில் நாளுக்கு நாள் அறிவும்,
பலருடைய அன்பும் இன்பமும் விருத்தியாகி வந்தன.