பக்கம் எண் :

196என் சரித்திரம்

யவர்கள் இயற்றிய கோவையைப் போல ஒன்று பெற்றதுண்டா? இந்தச்
சீகாழி வட்டத்தில் நாம் நீதி பரிபாலனத்திற்கு அதிபதியென்பதை நீர் அறிவீர்.
நமக்கு முன் சத்தியமாகச் சொல்லும். விதி-பிரமா. புகலி-சீகாழி]

வேதநாயகம் பிள்ளையைப் பற்றிச் சவேரிநாத பிள்ளை பாராட்டிப்
பேசினார்; “நான் பிள்ளையவர்களிடத்திலே வருவதற்கு அவரே சிபாரிசு
செய்தார். பிள்ளையவர்களிடத்தில் மிக்க அன்பும் மதிப்பும் உள்ளவர், அவர்
செய்யுட்களெல்லாம் எளிய நடையில் சாதுர்யமான பொருளை உடையனவாக
இருக்கும்” என்று கூறினார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர் தமிழில்
அவ்வளவு பற்றுடையவரென்பதைக் கேட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது.

பிள்ளையவர்கள் தம் வீட்டிற்குப் பின்புறத்திலுள்ள குளத்தின்
படித்துறையில் இருந்து பிற்பகலில் பாடம் சொல்லுவார். மேலே ஓடு
வேயப்பட்டிருந்தமையின் வெயிலின் கடுமை அங்கே இராது. அப்படித்துறையில்
குளிர்ந்த நிழலில் இருந்து பாடம் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம்.
சீகாழிக் கோவையைப் பெரும்பாலும் அங்கேயே பாடங் கேட்டேன். அது சில
தினங்களில் முடிவடைந்தது. அதைக் கேட்டபோது என் ஆசிரியர் கூறிய
செய்திகள் பிற்காலத்தில் என் தமிழாராய்ச்சிக்கு மிகவும் உபயோகமாக
இருந்தன.

சங்கீத முயற்சியைக் கைவிட்டுத் தமிழே துணையாக இருந்த எனக்கு
அக்காலத்தில் சங்கீதத் தொடர்பு அற்றுப் போனது ஒரு குறைவாகத்
தோற்றவில்லை. என் கவனத்தை இரண்டு திசைகளிற் பகிர்ந்து செலுத்தாமல்
ஒரே திக்கில் செலுத்தியது நல்லதுதானென்ற எண்ணமும் வர வர
உறுதியாயிற்று.

அத்தியாயம்-33

அன்பு மயம்

என் ஆசிரியர் பாடம் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள
இலக்கண விசேஷங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக
இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில்
எதுகை மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச்
செய்வார். கவிஞராகிய