பக்கம் எண் :

200என் சரித்திரம்

தோறும் செய்து வரும்போது சில நாட்கள் உமக்குச் சிரமமாக
இருக்கும். காலையில் சுறு சுறுப்பாகப் பாடம் கேட்பதற்கும் சிறிது தாமதம்
நேருகிறது. அதற்கு ஒரு வழி சொல்லுகிறேன். பிள்ளைத் தமிழில் வருகைப்
பருவம் மிகவும் முக்கியமானது. நீர் அந் நூலில் வருகைப் பருவத்தின் கடைசி
இரண்டு செய்யுட்களை மாத்திரம் பாராயணம் செய்து வந்தாற் போதும்.
இவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு” என்றார். அவர் கூறியது எனக்கு
அனுகூலமாகவே தோற்றியது. ஆதலின் அவர் கட்டளைப்படியே நான் அது
தொடங்கி அந்த இரண்டு செய்யுட்களை மாத்திரம் தினந்தோறும் சொல்லி
வரலானேன்.

தம்பியின் ஜனனம்

பிரஜோற்பத்தி வருஷம் ஆடி மாதம் பிறந்தது. எனக்குப் பதினேழாம்
பிராயம் நடந்தது. என் தந்தையாரும் தாயாரும் சூரிய மூலையில் இருந்தனர்.
ஆடி மாதம் மூன்றாந் தேதி திங்கட்கிழமை (17-7-1871) யன்று இறைவன்
திருவருளால் எனக்கு ஒரு தம்பி பிறந்தான். இச்செய்தியை எனக்குத்
தெரிவித்து அழைத்துச் செல்வதற்காக என் தந்தையாரே வந்தார். என் தாய்
தந்தையர் என்னைப் பிரிந்து வருந்துவதை நான் அறிந்தவன். அவ்வருத்தத்தை
ஒருவாறு போக்கி ஆறுதல் உண்டாக்கவே கடவுள் இக்குழந்தையைக்
கொடுத்திருக்கிறார் என்று நான் நம்பினேன்.

பிள்ளையவர்களிடம் என் தந்தையார் இச் சந்தோஷச் செய்தியைத்
தெரிவித்தபோது அவர் மகிழ்ந்தார். என்னை நோக்கி, “தம்பி யுடையான்
படைக்கஞ்சான்” என்பது பழமொழி. குழந்தை சௌக்கியமாக வளர்ந்து
உமக்குச் சிறந்த துணையாக இருக்க வேண்டுமென்று சிவபெருமானைப்
பிரார்த்திக்கிறேன்” என்றார். அப்பால், சிறிது நேரம் வரையில் என் படிப்பு
சம்பந்தமாகப் பேசி விட்டு, “நான் இவனை ஊருக்கு அழைத்துச் சென்று
புண்யாஹ வாசனம் வரையில் வைத்திருந்து பிறகு அனுப்பிவிடுகிறேன்” என்று
என் தந்தையார் பிள்ளையவர்களிடம் அனுமதி பெற்று என்னை அழைத்துக்
கொண்டு புறப்பட்டார்.

மாயூரத்திலிருந்து சூரிய மூலை ஏறக்குறைய 10 மைல் தூரம் இருக்கும்.
நாங்கள் நடந்தே சென்றோம். எங்கள் பிராயணம் பெரும்பாலும்
நடையாகத்தான் இருந்தது. செல்லும்போது தந்தையார் என்னுடைய காலப்
போக்கைப் பற்றி விசாரித்தார். நான் கூறிய விடையால் எனக்கிருந்த
உத்ஸாகத்தையும் சந்தோஷத்தையும் என்பால் உண்டாகியிருந்த கல்வி
அபிவிருத்தியையும் அறிந்தார்.