பக்கம் எண் :

204என் சரித்திரம்

களுடைய பெருமையை விரித்துரைக்கும் அந்நூலைப் பிள்ளையவர்கள்
போன்ற சிவபக்திச் செல்வம் நிறைந்தவர்கள் சொல்லத் தொடங்கினால்
இயல்பாகவே பக்தி ரஸம் செறிந்துள்ள அப்புராணம் பின்னும் அதிக
இனிமையை உண்டாக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

நான் பிரபந்தங்கள் பாடங்கேட்ட அளவில் நின்றிருந்தேன்;
காவியங்களைப் பாடம் கேட்கும் நிலையை அதுவரையில் அடையவில்லை.
ஆதலால் “நமக்கு இப்புராணத்தைப் பிள்ளையவர்கள் பாடம் சொல்வார்களோ”
என்று ஐயமுற்றேன்! அன்றியும் அதைக் கேட்பவர்கள் தக்க
மதிப்புடையவர்களாகவும் தமிழ்க் கல்வியிலும் பிராயத்திலும் என்னைக்
காட்டிலும் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளவர்கள். “இவர்களோடு
ஒருவனாக இருந்து பாடம் கேட்பது முடியாது” என்ற எண்ணமே எனக்கு முன்
நின்றது.

அந்நிலையில் என் அருமை ஆசிரியர் என்னை அழைத்து, “பெரிய
புராணத்தை நீரும் இவர்களுடன் பாடம் கேட்கலாம்” என்று கூறினார்;
அப்போது நான் மெய்ம்மறந்தேன். ஆனந்த வாரியில் மூழ்கினேன். சில நேரம்
வரையில் ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.

ஒரு பெரிய விருந்தில் குழந்தைகளை விலக்கி விடுவார்களா?
அவர்களையும் சேர்த்துக் கொண்டுதானே யாவரும் உண்ணுகிறார்கள்?
அப்பெரிய புராண விருந்தில் தமிழ்க் குழந்தையாகிய எனக்கும் இடம்
கிடைத்தது.

நாயன்மார்கள் வரலாறு கதையாக இருத்தலினாலும் சேக்கிழார் வாக்கு
ஆற்றொழுக்காகச் செல்வதாலும் பெரிய புராணம் எனக்குத் தெளிவாகப்
புலப்பட்டது. என் ஆசிரியர் பாடம் சொல்லும் முறையினால் நான் அதை
நன்றாக அனுபவித்துக் கற்று வந்தேன். பாடம் சொல்லி வரும்போது
பிள்ளையவர்களிடமுள்ள சிவ பக்தித்திறம் நன்றாகப் புலப்பட்டது.
அவர்களுடைய அந்தரங்கமான பக்தியைப் பெரிய புராணத்திலுள்ள
செய்யுட்கள் வெளிப்படுத்தின. நான் அதைப் பாடம் கேட்ட காலத்தில்
வெறுந்தமிழை மாத்திரம் கற்றுக்கொள்ளவில்லை; என்னுடைய மாதா மகர்,
தந்தையார் ஆகியவர்களது பழக்கத்தால் என் அகத்தே விதைக்கப்பட்டிருந்த
சிவநேசமென்னும் விதை பிள்ளையவர்களுடைய பழக்கமாகிய நீரால் முளைத்து
வரத் தொடங்கியது.