பக்கம் எண் :

22என் சரித்திரம்

இவ்வாறு இருக்கும் போது ஒரு சமயம் அவர்கள் திருச்சிராப்பள்ளிக்கு
அருகிலுள்ள பூவாளூர் என்னும் ஊருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே
அவர்கள் சில நாள் தங்கி இராமாயணக்கீர்த்தன காலக்ஷேபம் செய்து காலங்
கழித்தார்கள். இடையே ஒருநாள் அவ்வூருக்குத் திரிசிரபுரம்
மகாவித்துவானாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வந்திருப்பதாகக்
கேள்வியுற்றார்கள். பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் வசித்து வந்த காலம் அது.
அவருடைய பெருமை அந்நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம்
பரவியிருந்தது.

சேஷு வையரும் சாமிநாதையரும் அப் புலவர்பிரான் வந்திருப்பது
தெரிந்து நெடுநாட்களாகத் தங்கள் மனத்திலிருந்த குறையை நிறைவேற்றிக்
கொள்ளலாமென்ற எண்ணத்தோடு சென்று அவரைக் கண்டு
பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் வித்துவான்களைக் கண்டால் உபசரித்து
அன்போடு உபகாரம் செய்வது அப் பெரியாருடைய வழக்கம். தமிழ்க்
கல்வியில் ஒருவருக்குச் சிறிதளவு அன்பிருந்தாலும் அதைப் பெரிதாகப்
பாராட்டி ஊக்க மூட்டுவார்.

இரண்டு சகோதரர்களும் தம்முடைய வரலாற்றைக் கூறினார்கள்; தம்
தந்தையார் இயற்றிய குறவஞ்சியிலிருந்து சில பாட்டுக்களைப் பாடிக்
காட்டினார்கள்.

பிள்ளையவர்கள்:-எல்லாம் நன்றாக இருக்கின்றன. தமிழ்
வித்துவானாகிய உங்களுடைய தந்தையாரை நான் பாராவிட்டாலும் உங்கள்
இயல்பே அவருடைய பெருமையை விளக்குகின்றது. உங்களுக்கும் செய்யுள்
இயற்றும் பழக்கம் உண்டோ?

சகோதரர்கள்:- இல்லை; இனிமேல் பழகிக் கொள்வதும் இயலாத
காரியம், தங்களிடம் ஒரு வேண்டுகோள் செய்துகொள்ள வந்திருக்கிறோம்.

பிள்ளை : - என்ன அது?

சகோ:- பம்பரஞ் சுற்றியென்னும் ஊரினராகிய சுப்பையரென்பவர்
இயற்றிய மயில் ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களை நாங்கள் பாடிப் பொருள்
சொல்வதுண்டு. அச் சரித்திர சம்பந்தமான செய்யுட்கள் இருப்பின்
இடையிடையே சொல்ல அனுகூலமாக இருக்கும். தாங்கள் சில கவிகள்
இயற்றித் தந்தால் இசையுடன் பாடி யாவரையும் மகிழச் செய்து பிழைப்போம்.