பக்கம் எண் :

228என் சரித்திரம்

அத்தியாயம்-38

நான் கொடுத்த வரம்

திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவிடைமருதூருக்கு
மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஆறு முகத்தா
பிள்ளையின் மைத்துனராகிய சுப்பையா பண்டாரமென்பவருடைய வீட்டில்
தங்கினோம். இரவில் அங்கே தங்கி விட்டு மறுநாட் காலையில்
பட்டீச்சுரத்துக்குப் புறப்படலாமென்று என் ஆசிரியர் எண்ணினார்.

சிவக்கொழுந்து தேசிகர் பெருமை

பிள்ளையவர்கள் தளர்ந்த தேகமுடையவர். ஆதலின் ஜாகை
சேர்ந்தவுடன் படுத்தபடியே சில நூற் செய்யுட்களை எனக்குச் சொல்லி எழுதிக்
கொள்ளச் செய்து பொருளும் விளக்கினார். திருவிடைமருதூர் சிறந்த
ஸ்தலமென்பதையும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரென்னும்
வித்துவான் அதற்கு ஒரு புராணம் இயற்றியுள்ளாரென்பதையும் கூறினார்.
சிவக்கொழுந்து தேசிகரைப் பற்றிய பேச்சு வரவே அவர் இயற்றிய
செய்யுட்களைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் மிகவும் பாராட்டிக் கூறினார்.

சுப்பையா பண்டாரத்தின் வீட்டில் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் என்
ஆசிரியருக்கும் விருந்து நடந்தது. ஆசிரியர் சுப்பையா பண்டாரத்தைப்
பார்த்து, “சாமிநாதையருக்கு ஆகாரம் செய்விக்க ஏற்பாடு செய்யவேண்டும்”
என்று சொன்னார். அவர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் நல்ல பிரசாதங்கள்
கிடைக்குமென்று கூறி என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
திருவிடைமருதூர் ஆலயம் திருவாவடுதுறை ஆதீன விசாரணைக்கு உட்பட்டது.
அவ்வாலய நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு ஒரு தம்பிரான் உண்டு.
திருவிடைமருதூரில் திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்த கட்டளை மடமும்
இருக்கிறது. அவ்வூர் திருவாவடுதுறைக்கு ஆறு மைல் தூரத்தில் இருப்பதால்
சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் ஆதீனகர்த்தர் திருவிடைமருதூர்க் கட்டளை
மடத்தில் வந்து தங்கி இருப்பது வழக்கம்.

கட்டளைத் தம்பிரான்

திருவிடைமருதூரில் கட்டளை விசாரணையில் முன்பு சுப்பிரமணியத்
தம்பிரானென்பவர் இருந்தார்; அவர் ஆலய நிர்வாகத்தை மிகவும்