பக்கம் எண் :

24என் சரித்திரம்

பச்சைமிரியன் ஆதிப்பையரிடத்தும் சங்கீத சிக்ஷை பெற்றார். பிறகு சில
காலம் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துச் சங்கீத வித்துவான்களுள் ஒருவர் ஆனார்.

அக்காலத்தில் பொப்பிலி ஸமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா
என்னும் பிரபல சங்கீத வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் கன
மார்க்கத்தில் மிகச் சிறந்த வன்மை பெற்றவர். தஞ்சை அரசருடைய சபையில்
அவர் பாடினார். கன மார்க்கத்தின் தன்மையை அரசரும் பிறரும் அறிந்து
பாராட்டினர். தமிழ்நாட்டில் அக்காலத்தில் கனமார்க்கம் வழக்கத்தில் இல்லை.
அதனால், ‘இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் கனமார்க்கத்தை
அப்பியாசம் செய்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நமது
ஸமஸ்தானத்திற்கும் கௌரவமாக இருக்குமே!, என்று அரசர் எண்ணினார்.
ஸமஸ்தான வித்துவான்கள் கூடியிருந்த சபையில் அவ்விருப்பத்தை அவர்
வெளியிட்டபோது ஒருவரேனும் அங்ஙனம் செய்ய முன் வரவில்லை. கன
மார்க்க சங்கீதத்திற்கு நல்ல தேக பலமும் இடைவிடாத முயற்சியும் வேண்டும்.
அதனால் வித்துவான்கள் அதனைப் புதிதாகப் பயில்வதற்கு முன் வரவில்லை.

அப்போது இளைஞராக இருந்த கிருஷ்ணையர் தாம் அப்பியாசம்
செய்வதாகத் தைரியத்துடன் கூறினார். பொப்பிலி கேசவையாவிடம் அந்த
மார்க்கத்தின் இயல்புகளையும் அதனைச் சார்ந்த சக்கரதானத்தைப் பாடும்
முறையையும் தெரிந்துகொண்டு கபிஸ்தல மென்னும் ஊருக்குச் சென்று
இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வருடைய ஆதரவில் அப்பியாசம் செய்யத்
தொடங்கினார்.

அந்த அப்பியாசம் வரவர முதிர்ச்சி அடைந்தது. கடைசியில் தஞ்சை
அரசர் முன்னிலையில் பொப்பிலி கேசவையாவே வியந்து பாராட்டும்படி பாடிக்
காட்டினார். அது முதல் இவர்
கனம் கிருஷ்ணையரென்றே வழங்கப்
பெற்றார்.

கனம் கிருஷ்ணையர் சில காலம் திருவிடைமருதூரில் மகாராஷ்டிர
மன்னர் வமிசத்தைச் சேர்ந்த அமர சிம்மரது சமூக வித்துவானாக இருந்தார்.
நந்தன் சரித்திரக் கீர்த்தனையின் ஆசிரியராகிய ஸ்ரீ கோபால கிருஷ்ண
பாரதியார் அங்கே வந்து அரண்மனை வித்துவானாகிய ராமதாசரென்னும்,
பெரியாரிடத்தில் சங்கீத அப்பியாசம் செய்து வந்தார். இடையிடையே கனம்
கிருஷ்ணையருடன் பழகி இவரிடமும் சில கீர்த்தனைகளைக் கற்றுக்
கொண்டார்.

பிறகு கனம் கிருஷ்ணையர் உடையார்பாளையம் ஸமஸ்தானாதிபதியாக
அப்போதிருந்த கச்சிரங்கப்ப உடையாரால் அழைக்கப்