பக்கம் எண் :

பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் 245

பாடம் சொல்லுவதனால் பிற்பகலில் ஆறுமுகத்தாபிள்ளை நல்ல
பழங்களையும் நீரையும் கொணர்ந்து அளிப்பார். அங்கே மிகவும்
இனிமையாகப் பொழுதுபோகும்.

ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு

ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில்
பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு
சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும்
உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய
காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ தினமாகவே இருக்கும்.
கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு
நாள்தோறும் சிலர் வந்த வண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்
கூடங்களில் தமிழாசிரியர்களாக இருப்பவர்கள் சனி ஞாயிறுகளில் வந்து
தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டு செல்வார்கள். இவ்வாறு
வருபவர்கள் யாவரும் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டிலேயே உணவு
கொள்வார்கள். தம்முடைய பெருமையை யாவரும் உணர
வேண்டுமென்பதற்காகவே விசேஷமான விருந்துணவை அளிப்பார்.
திருவாவடுதுறை மடத்தில் நன்கு பழகினவராதலின் உணவு வகைகளிலும்
விருந்தினரை உபசரிப்பதிலும் அங்கேயுள்ள சில அமைப்புக்களைத் தம்
வீட்டிலும் அமைத்துக்காட்டவேண்டுமென்பது அவரது விருப்பம்.

பிள்ளையவர்களிடத்திலேதான் ஆறுமுகத்தாபிள்ளை பணிவாக நடந்து
கொள்வார். மற்றவர்களை அவர் மதிக்க மாட்டார். யாவரும் அவருடைய
விருப்பத்தின்படியே நடக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மிக்க
கோபம் வந்துவிடும்; அந்தக்கோபத்தால் அவர் சில ஏழை ஜனங்களைக்
கடுமையாகவும் தண்டிப்பார்.

நாகைப் புராணம்

நான் கையில் கொண்டு போயிருந்த பிரபந்தங்களையெல்லாம்
ஒவ்வொன்றாகச் சில தினங்களில் பாடம் கேட்டு முடித்தேன். மேலே பாடம்
கேட்பதற்கு என்னிடம் வேறு புஸ்தகம் ஒன்றும் இல்லை. இந்த விஷயத்தை
ஆசிரியரிடம் தெரிவித்தேன்.

“தம்பியிடம் புஸ்தகங்கள் இருக்கின்றன. ஏதாவது வாங்கிப் படிக்கலாம்.
முதலில் திருநாகைக் காரோணப் புராணம் படியும்” என்று அவர் கூறி
அந்நூலை ஆறுமுகத்தாபிள்ளையிடமிருந்து வாங்கி அளித்தார்.