பக்கம் எண் :

ஆறுமுக பூபாலர் 251

சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல்
வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன்.

‘ஒரு செய்யுள் செய்யட்டும்’

சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்து
அவ்வழியே சென்றார். செல்லும் போது நான் சும்மா நிற்பதைப் பார்த்து, “ஏன்
இவர் சும்மா நிற்கிறார்? பாடம் கேட்பதற்கு என்ன?” என்று சொன்னார். என்
ஆசிரியர் மெல்ல, “இவர் புஸ்தகம் வைத்த இடத்தில் அது
காணப்படவில்லையாம்” என்றார்.

“அப்படியா சமாசாரம்? படிக்கிற புஸ்தகத்தைக்கூட ஒழுங்காக வைத்துக்
கொள்ளாதவர் என்ன படிக்கப் போகிறார்? இவருக்கு ஐயா பாடம் சொல்வது
வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம்
கவலையில்லாமல் இருப்பாரா?” என்று அவர் சொல்லிக்கொண்டே
போய்விட்டார்.

“இப்படியே புறப்பட்டு ஊருக்குப் போய்விடலாமா?” என்று கூட
எனக்குத் தோன்றிவிட்டது. அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பதில் கூறும்
துணிவு எனக்கு உண்டாகவில்லை.

மறுபடியும் அநத் மனிதர் வந்தார்: “இவர் இவ்வளவு காலமாகப் படித்து
வருகிறாரே; தமிழில் இவருக்கு ஏதாவது பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள்
வருந்தி வருந்தி ஓயாமல் பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச்
சிந்தனை செய்து அறிந்து கொள்ளுகிறாரா? உங்களுடன் பழகும் இவர்
ஒழுங்காகப் பாடம் கேட்டிருந்தாரானால், இப்போது தமிழில் செய்யுள் இயற்றும்
பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. எங்கே, இப்போது இவரை ஒரு
செய்யுள் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் போய் வருவதற்குள் ஒரு
செய்யுளை இயற்றி இவர் சொன்னால் இவர் புஸ்தகங்கள் எங்கே இருந்தாலும்
வருவித்துக் கொடுக்கிறேன்; இல்லையானால் புதிய புஸ்தகங்களை வாங்கித்
தருகிறேன்” என்று சொன்னார்.

“தம்பியின் விஷயமாகவே ஒரு செய்யுள் செய்து சொல்லும்,
பார்க்கலாம்” என்று ஆசிரியர் என்னை நோக்கிக் கட்டளையிட்டார்.

ஆறுமுகத்தா பிள்ளை நானாகச் செய்யுள் செய்கிறேனா என்பதைக்
கவனிக்கும் பொருட்டு ஒருவரைக் காவல் வைத்து, “நான் வருவதற்குள்
செய்யுளை இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று எச்சரிக்கையும் செய்து
சென்றார்.