பக்கம் எண் :

268என் சரித்திரம்

அடேயப்பா! எத்தனை கூட்டம்! என்ன இரைச்சல்! என்ன சாப்பாடு!
எங்களுக்கு அக்கூட்டத்தில் இடம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வந்து
விட்டது. காலையில் ஒன்பது மணி முதல் அன்னதானம் நடந்து வருகிறது.
நாங்கள் போனபோதும் கூட்டத்திற்குக் குறைவில்லை. மெல்ல இடம் பிடித்துச்
சாப்பிடுவதற்குள் மிகவும் திண்டாடிப் போனோம்.அவ்வுணவின் மிகுதியால்
சாப்பிட்ட பிறகும் சிறிது சிரமப்பட்டோம்.

மறுபடியும் ஆசிரியரைத் தேடும் வேலையைத் தொடங்கினோம்.
சாப்பிட்ட சிரமத்தால் காலையில் தேடியபோது இருந்த வேகம் எங்களுக்கு
அப்போது இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாகச் சுற்றினோம்.
இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?”
என்று கேட்போம். “அவர்கள் எங்கும் இருப்பார்கள்; பண்டார ஸந்நிதிகளோடு
சல்லாபம் செய்து கொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில்
இருப்பார்கள், இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி
வருவார்கள்” என்று விடை கூறுவர். “மாணாக்கர்களுக்குப் பாடம்
சொல்லுவார்கள்” என்பதைக் கேட்கும்போது எனக்கு ஒருவிதமாக வேதனை
உண்டாகும். “அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்து
கொண்டிருக்கிறோமே!” என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக
எடுத்துவைப்பேன்.

பிள்ளையவர்களைக் கண்டது

கடைசியில், தெற்கு வீதியில் மடத்துக் காரியஸ்தராகிய நமச்சிவாய
முதலியாரென்பவர் வீட்டுத் திண்ணையில் என் ஆசிரியர் அமர்ந்திருந்ததைக்
கண்டேன். அவர் பக்கத்திலே சில கனவான்களும் தம்பிரான்களும்
இருந்தார்கள். எல்லோரும் மிகவும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
பிள்ளையவர்கள் என்னைக் கண்டவுடன், “எப்பொழுது வந்தீர்? ஆகாரம்
ஆயிற்றா? தேக சௌக்கியம் எப்படி இருக்கிறது?” என்று அன்பு ததும்ப
விசாரித்தார்கள். நான் பதில் சொன்னவுடன், “உடம்பு இளைத்திருக்கிறது.
இன்னும் ஏதாவது மருந்து சாப்பிடுகிறீரோ?” என்றார். “இல்லை” என்றேன்
பிறகு என் தாய் தந்தையரைப் பற்றி விசாரித்தனர்.

“குரு பூஜையை இதுவரையில் நீர் பார்த்ததில்லையே?” என்று
கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“இந்த மாதிரி விசேஷம் எங்கும் இராது. எல்லாம் ஸந்நிதானத்தின்
பெருமையினாலும் கொடையினாலுமே நடக்கின்றன.”