பக்கம் எண் :

புலமையும் அன்பும் 277

கொடுத்த, “இதைக் கொண்டு போய் விடுதியிற் கொடுத்துச் சாப்பிட்டு
வாரும்” என்று அனுப்பினார். அது முதல் பழையபடி முன் சொன்ன
விடுதியிலேயே ஆகாரம் செய்துவந்தேன்.

அம்பர்ப்புராணம்

ஒரு நாள் ஆசிரியர் தம் புஸ்தகக் கட்டில் உள்ள ஒர் ஏட்டுச் சுவடியை
எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு
எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது;
‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தல வரலாற்றைச் சொல்லுவது.
அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப்
படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான்
சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள்
முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து
ஒரு வருஷமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான்
சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக்
கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக்
கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர்
செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன்.
சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று
சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர்
ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்.

“காத்திருக்கிறேன்” என்றேன் நான்.

“திருவாவடுதுறைக்கு வந்து இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன்.
தம்பிரான்களுக்குப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக
இருக்கிறது. இதை அங்கே போய் முடித்துவிடலாம்” என்று அவர் சொன்னார்.
அப்போது நான் திருவாவடுதுறைப் பிரயாணம் சமீபத்தில் இருப்பதை அறிந்து
சந்தோஷமடைந்தேன்.