பக்கம் எண் :

284என் சரித்திரம்

அத்தியாயம்-47

அன்பு மூர்த்திகள் மூவர்

திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும்
மாலையிலும் முறையாக நடந்து வந்தன சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு
என்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது பிள்ளையவர்களுக்கு
என்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவு
காட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும்
நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்த
ஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகஸ்தர்கள் என்னிடம்
பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனே
கொடுத்து உதவித் தங்கள் அன்பைப் பலப்படுத்தினர். எல்லோருடைய
அன்பும் நிலைத்திருக்க வேண்டுமென்ற கவலையால் யாரிடமும் நான் மிகவும்
பணிவாகவும் ஜாக்கிரதையாகவும் நடப்பதை ஒருவிரதமாக மேற்கொண்டேன்.

‘சந்நிதானத்தின் உத்தரவு’

மாசி மாதம் மகா சிவராத்திரி வந்தது. திருவாவடுதுறையில்
உள்ளவர்களுக்கு ஏதேனும் சாமான்கள் வேண்டுமானால் மடத்து
உக்கிராணத்திலிருந்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். அக்காலத்தில்
அவ்வூரில் கடைகள் இல்லை. சிவராத்திரியாதலால் மாலையில் கோமுத்தீசுவரர்
ஆலயத்துக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்ய எண்ணினேன். தேங்காய்,
பழம், பாக்கு, வெற்றிலை முதலியவை வேண்டும். கடைகளோ இல்லை.
ஆதலால் ‘மடத்து உக்கிராணத்திலே வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்துக்
காலைப் பாடம் முடிந்தவுடன் அவ்விடத்தையடைந்து வெளியில் நின்றபடியே
உக்கிரணக்காரரிடம் எனக்கு வேண்டியவற்றைச் சொன்னேன். “ஐயரவர்கள்
எப்போது எது கேட்டாலும் கொடுக்க வேண்டுமென்று சந்நிதானத்தில்
உத்தரவு” என்று கணீரென்று ஒரு சப்தம் கேட்டது. அசரீரி வாக்கைப்போன்ற
அவ்வொலி எங்கிருந்த வந்ததென்று கவனித்தேன். கந்தசாமி ஓதுவாரென்பவர்
அவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே அயலிலிருந்த ஒரு
ஜன்னலுக்கு அப்புறத்தில் பண்டார சந்நிதிகள் அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
உடனே எனக்குச் சிறிது நாணம் உண்டாயிற்று. “எது வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்ளலாமென்று உத்தரவாகிறது” என்று அருகில் வந்த ஓதுவார்
மீட்டும் சொன்னார். அதனை உறுதிப்