பக்கம் எண் :

286என் சரித்திரம்

அவர்களை நான் எதிர்ப்பார்க்கவுமில்லை. “அவர்கள் எங்கே
தங்கியிருக்கிறார்களோ? பழக்கமில்லாத இடமாயிற்றே! சாப்பிடும் நேரமாயிற்றே!
அப்பா பூஜை பண்ணவேண்டுமே!” என்றெல்லாம் நான் விரிவாக யோசனை
செய்தேன். என் உள்ளத்து உணர்ச்சிகளை முகக் குறிப்பால் ஒருவாறு ஊகித்து
உணர்ந்த ஓதுவார், “கவலைப்படவேண்டாம். அவர்கள் காலையிலே வந்து
விட்டார்கள். அவர்கள் வந்து அண்ணாவைப் பற்றி விசாரித்தபோதே
இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவர்களுக்குச் சத்திரத்தில் தக்க இடம்
கொடுத்து வேண்டிய சாமான்களை அனுப்பினேன். ஐயாவின் பூஜைக்கு
வேண்டிய பால் முதலிய திரவியங்களையும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள்
அங்கே ஸ்நானத்தையும் பூஜையையும் முடித்துக் கொண்டு அண்ணாவின்
வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். போய் ஆகாரம் செய்ய வேண்டியதுதான்.
இப்போது அங்கே போய் விசாரித்து விட்டுத்தான் வருகிறேன்” என்றார்.

எனக்குத் தெரியாமலே நிகழ்ந்த அச்செயல்களைக் கேட்டு நான்
ஆச்சரியமடைந்தேன். ஓதுவாருடைய அன்பையும் விதரணையையும் மடத்தில்
உள்ள ஒழுங்கையும் பாராட்டியபடியே நான் விரைவாக என் தாய் தந்தையர்
உள்ள இடத்துக்குச் சென்றேன்.

பெற்றோர் மகிழ்ச்சி

நான் அங்கே போனவுடன், “எப்படிப்பட்ட மனுஷ்யர்கள்! என்ன
ஏற்பாடுகள்! என்ன விசாரணை!” என்று என் தந்தையார் தம் சந்தோஷத்தை
வெளிப் படுத்தினார். “சாமா, இம்மாதிரியான இடத்தை நான்
பார்த்ததேயில்லை. நாங்கள் உன்னைப் பார்த்து விட்டுப் போகலாமென்று
இன்று காலையில் இங்கு வந்தோம். சிலர் சத்திரத்தில் தங்கலாமென்று
சொன்னார்கள். அப்போது இவ்விடம் வந்தோம். இங்கே ஒருவர்
எதிர்ப்பட்டார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். உன்னைப் பார்க்க
வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே எங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம்
விசாரித்து விசாரித்துக் கொடுத்து உதவினார். “இந்த மாதிரியான
மனுஷ்யர்களை நான் இதுவரை பார்த்ததில்லை அவர் யார்?” என்று என்
தாயாரும் கேட்டார்.

“அவர் எனக்கு ஒரு தம்பி” என்று மனத்துக்குள்ளே சொல்லிக்
கொண்டேன். ஓதுவாருடைய அன்பை என் மனம் நன்றாக அறியும்.
அவர்களுக்கு அவ்வளவு தெரியாதல்லவா?

“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குழந்தையாக
இருந்த என் தம்பியை என்னிடம் அன்னையார் அளித்தார். நான்
சந்தோஷமாக வாங்கி அணைத்துக் கொண்டேன்.