பக்கம் எண் :

சில சங்கடங்கள் 293

“அப்படிச் சொல்லலாமா? இந்த ஐயர் புதியவர் அல்லவா? இவர்
எடுத்திருக்க மாட்டாரா?” என்று அந்த மனிதர் சொன்னார்.

அந்த வார்த்தை என் காதில் விழுந்ததோ இல்லையோ எனக்கு
நடுக்கமெடுத்தது. அரை குறையாக இருந்த தூக்க மயக்கம் எங்கேயோ பறந்து
போயிற்று.

“ஐயோ! ஒரு பாவமும் அறியாத நம்மைச் சந்தேகிக்கிறார்களே!
திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்ளவா இவர்களுடன் பழகுகிறோம்! எதற்காக
நாம் இங்கே வந்தோம்!” என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

“என்ன சொன்னாய்? அடபாவி! அந்த வார்த்தையை மறுபடி சொல்ல
வேண்டாம்” என்று பன்னிருகைத் தம்பிரான் அம்மனிதரை நோக்கிச்
சொன்னார்.

குமாரசாமித் தம்பிரானோ மிக்க கோபக் குறிப்புடன், “உம்மை யாரையா
கேட்டார்? மனிதர்களுடைய தராதரம் லவலேசமும் தெரியாத நீர்
அபிப்பிராயம் சொல்ல வந்து விட்டீரே! வந்த வழியைப் பார்த்துக்கொண்டு
போம். இனி இங்கே நிற்க வேண்டாம்” என்று கடுமையாகக் கூறினார்.

ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.
இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்
வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்
விட்டார்.

அபய வார்த்தை

அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,
பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.
“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாஷணையைக் கவனித்தேன்.
எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி விட்டீர்கள். என்
உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது.
என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று
அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒரு
விதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான்,
“நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா?
எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்ய மாட்டோம்.
வந்த மனுஷ்யன் ஏதோ அசட்டுத் தனமாய்ச்