பக்கம் எண் :

296என் சரித்திரம்

வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும்
இருப்பதைப் போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர்
முகத்தில் தோற்றியது. போஜனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர்
திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை
நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும்
பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை
இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமி நாதையர் என்னுடன்
வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்து
விட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக
எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு
காரியஸ்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர்
போஜனம் செய்து வந்திருப்பார்” என்றார்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’

ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம்
அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போஜனம் செய்பவர் போலப்
பாவனை செய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச்
சுத்தி செய்து கொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு
நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த
நான் எழுந்து நின்றேன்.

நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில்
வந்து முகத்தை உற்று நோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம் செய்தாயிற்றா?”
என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம்
சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு
தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.

பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர்
அவ்வளவு வேகமாக வந்ததும், என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும், சில
தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு
நிகழ்ச்சிகளைப் போல இருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக்
கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்து
கொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்” என்று கூறி அங்கே
நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது