பக்கம் எண் :

298என் சரித்திரம்

சாலையில், தேசிகர் ஸ்நானம் செய்துவிட்டு வரும்போது அவருடன்
சல்லாபம் செய்வதற்காகவே சிலர் காவிரித்துறையில் காத்திருப்பார்கள்.

ஆலய தரிசனம்

வரும் வழியில் சமாதித் தோப்பு என்ற ஓரிடம் இருக்கிறது. அதைச்
சார்ந்து திருவாவடுதுறை மடத்தில் தலைவர்களாக இருந்த பலருடைய சமாதிக்
கோயில்கள் உள்ளன. அதற்கு முன்னே சிறிது தூரத்தில் சாலையின் ஓரமாக
மறைஞான தேசிகர் என்ற பெரியாரின் சமாதி இருக்கிறது. சுப்பிரமணிய
தேசிகர் காவிரியிலிருந்து மடத்துக்கு வரும்போது அவ்விடத்தில் நின்று
தரிசனம் செய்து விட்டு வருவார். அப்பால் சிவாலயத்துக்கு வந்து ஸ்வாமி
தரிசனம் செய்து பிறகு மடத்திற்குச் செல்வார். செல்லும்போது ஆலயத்தின்
கிழக்கு வாயிலிலுள்ள துணைவந்த விநாயகருக்குச் சில சிதர்த் தேங்காய்கள்
உடைக்கப்படும்.

மடத்தில் முதலில் திருமாளிகைத் தேவரைத் தரிசித்து விட்டுப் பிறகு
ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி ஸந்நிதியில் வந்து தரிசிப்பார். அம் மூர்த்தியின்
தோத்திரமாகிய ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் மாலை என்னும் பிரபந்தத்திலிருந்து
பத்துப் பாடல்களை ஓதுவார்கள் முறையே சொல்வார்கள். ஒவ்வொரு பாடல்
சொல்லி முடிந்ததும். ஒருமுறை தேசிகர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வார்.
இவ்வாறு பத்து நமஸ்காரங்கள் செய்துவிட்டு அடியார்களுக்கு விபூதி
அளிப்பார். பிறகு ஒடுக்கத்திற்குச் சென்று தம் ஆசனத்தில் அமர்வார். ஐந்து
மணிக்கு முன்னரே எழுந்தவர் ஒடுக்கத்துக்கு வந்து அமரும்போது காலை
மணி எட்டாகிவிடும்.

உடனே மடத்திலுள்ள தம்பிரான்களும் மற்ற அடியார்களும் தேசிகரைப்
பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள். பிறகு யாரேனும் யாசகர்
வந்திருக்கிறாரா என்று தேசிகர் விசாரிப்பார்.

தர்மச் செயல்

யாரேனும் தேசிகரிடம் பொருளுதவி பெறும் பொருட்டு வந்தால்
அவர்கள் காலையிலே தேசிகரைப் பார்த்துத் தம் காரியத்தை நிறைவேற்றிக்
கொள்வார்கள். தேசிகர் தம் ஆசனத்தில் அமர்ந்தவுடன் கவனிக்கும் முதற்
காரியம், “யாசகர் வந்திருக்கிறார்களா?” என்ற ஆராய்ச்சிதான். யாரேனும்
வராவிட்டால். “இன்று ஒருவரும் வரவில்லையே!” என்று சிறிது வருத்தத்தோடு
சொல்வார்.