பக்கம் எண் :

300என் சரித்திரம்

எண்ணம் வித்துவானுக்கு உண்டாகிவிடும். அவர் அது முதல்
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவராகிவிடுவார். இவ்வாறு வருகிற
வித்துவான்களுக்கு ஊக்கமும், பொருள் லாபமும் உண்டாவதோடு
தேசிகருடைய அன்பினால் அவர்களுடைய கல்வியும் அபிவிருத்தியாகும். ஒரு
துறையிலே வல்லார் ஒரு முறை வந்தால் அவருக்குத் தக்க சம்மானத்தைச்
செய்யும்போது தேசிகர். “இன்னும் அதிகமான பழக்கத்தை அடைந்து வந்தால்
அதிக சம்மானம் கிடைக்கும்” என்ற கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவார்.
வித்துவானும் அடுத்த முறை வரும்போது முன் முறையைக் காட்டிலும்
வித்தையிலே அதிக ஆற்றல் பெற்று வருவார். அதன் பயனாக அதிகமான
சந்தோஷத்தையும் சம்மானத்தையும் அடைவார்.

பல ஸமஸ்தானங்களில் நூற்றுக்கணக்காகச் சம்மானம் பெறும்
வித்துவான்களும் தேசிகரிடம் வந்து சல்லாபம் செய்து அவர் அளிக்கும்
சம்மானத்தைப் பெறுவதில் ஒரு தனியான திருப்தியை அடைவார்கள். தேசிகர்
அதிகமாகக் கொடுக்கும் பரிசு பதினைந்து ரூபாய்க்கு மேல் போகாது. குறைந்த
பரிசு அரை ரூபாயாகும். ஆனாலும் அப்பரிசை மாத்திரம் அவர்கள் கருதி
வருபவர்களல்லர்; வித்தையின் உயர்வையும், அதை உடையவர்களின்
திறமையையும் அறிந்து பாராட்டிப் பேசும் தேசிகருடைய வரிசையறியும்
குணத்தை அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணியே வருவார்கள்.

மடத்திற்கு வரும் வித்துவான்கள் சில சமயங்களில் வாக்கியார்த்தம்
நடத்துவார்கள். தாம் தேசிகரைப் பாராட்டி இயற்றிக் கொணர்ந்த
சுலோகங்களையும் செய்யுட்களையும் சொல்லி விரிவாக உரை கூறுவார்கள். பல
நூற்கருத்துக்களை எடுத்துச்சொல்வார்கள். இடையிடையே தேசிகர் சில சில
விஷயங்களைக் கேட்பார். அக்கேள்வியிலிருந்தே தேசிகருடைய
அறிவுத்திறமையை உணர்ந்து அவ்வித்துவான்கள் மகிழ்வார்கள். இப்படி
வித்தியா விநோதத்திலும் தியாக விநோதத்திலும் தேசிகருடைய பொழுது
போகும்.

மடத்து நிர்வாகம்

மடத்துக் காரியங்களைக் கவனிப்பதற்கு நல்ல திறமையுள்ளவர்களைத்
தேசிகர் நியமித்திருந்தார். பெரிய காறுபாறு, சின்னக் காறுபாறு, களஞ்சியம்
முதலிய உத்தியோகங்களில் தம்பிரான்கள் பலர் நியமிக்கப் பெற்றிருந்தனர்.
உக்கிராணம், ராயஸம் முதலிய வேலைகளில் மற்றவர்களையும்
நியமித்திருந்தார். மடத்தில் தினந்தோறும் நிகழவேண்டிய காரியங்கள்
ஒழுங்காக ஒரு தவறும் இல்லா