பக்கம் எண் :

316என் சரித்திரம்

ஒரு பிரதியுபகாரமும் செய்யாமல் இருக்கிறோமே!” என்ற
வருத்தத்தோடு செல்லுகையில், என் இடையில் இருந்த வெள்ளி அரைஞாண்
ஞாபகத்திற்கு வந்தது. என் சிறிய தந்தையார் இரட்டை வடத்தில்
அவ்வரைஞாணைச் செய்து எனக்கு அணிவித்திருந்தார். அப்பாத்துரை
ஐயரிடம் அதனைக் கழற்றிக் கொடுத்து, “நான் இப்போது திருவாவடுதுறை
போகிறேன். இவ்வளவு நாள் என்னால் உங்களுக்குச் சிரமம் நேர்ந்தது. இதை
வைத்துக் கொள்ளுங்கள். பிறகு செலவுக்கு அனுப்பி இதை வாங்கிக்
கொள்ளுகிறேன்” என்றேன்.

அதை அவர் திருப்பி என் கையில் அளித்து, “அப்பா,
நன்றாயிருக்கிறது நீ பண்ணின காரியம்! உனக்குச் சாதம் போட்டா
எங்களுக்குக் குறைந்து போய் விடுகிறது? உனக்காக நாங்கள் என்ன விசேஷ
ஏற்பாடு பண்ணிவிட்டோம்? ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ
உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால்
அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும்,
அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந்தாலும் அவருடைய அன்பு
நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன்.
“இவர்களே மனிதர்கள்! இவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது; சூரியன்
உதயமாகிறான்” என்று என் மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். அவரையும்
அவர் மனைவியாரையும் நமஸ்காரம் செய்துவிட்டுப் புறப்பட்டேன்.

அரைஞாணை ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு நான் என்ன செய்ய
முடியும்? ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ?” என்று என்
உள்ளம் ஏங்கியது. பிற்காலத்தில் எனக்கு வேலையான போது அக்கடனை
ஒருவாறு தீர்த்துக் கொண்டேன்.

அப்பால் பிள்ளையவர்கள் முதலிய எல்லோரிடமும் விடை பெற்று
நான் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன்.

அத்தியாயம்-52

திருப்பெருந்துறைப் புராணம்

ஆசிரியரின் உத்தரவுப்படி நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்த
பிறகு அவரைப் பிரிந்திருக்க நேர்ந்தது பற்றி மிகவும் வருந்தினேன். ஆனாலும்
சுப்பிரமணிய தேசிகருடைய அன்பும்