பக்கம் எண் :

322என் சரித்திரம்

அப்பொழுது மடத்துக்குக் கல்லிடைக்குறிச்சியி லிருந்து வீரராகவையர்
என்ற கனவான் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்து சத்திரத்தில் தங்கியிருந்தார்.
அவருடைய முதிய தாயார் ஒரு விதமான உதவி செய்வாரும் இல்லாமல் நான்
கஷ்டப்படுவதைக் கண்டு இரங்கி வருந்தி, “அப்பா! நீ கவலைப்படாதே; நான்
பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி என் அருகில் இருந்து வேண்டிய
அனுகூலங்களைச் செய்து வந்தார். இரவு முழுவதும் தூங்காமல் என்னைக்
கையைப் பிடித்து அழைத்துச் சென்றும், தாகமென்று சொன்ன போதெல்லாம்
வெந்நீர் வைத்துக் கொடுத்தும் பாதுகாத்தார். எனக்குத் துன்பத்தைக் கொடுத்த
அம்மையின் தெய்வம் அத்துன்பத்தினிடையே பாதுகாப்பதற்கு அவ்வுருவம்
எடுத்து வந்ததாகவே எண்ணினேன்.

தை மாதத்தில் நடைபெறும் குருபூஜை சமீபித்துக்கொண்டிருந்தது.
அதன் பொருட்டுப் பலர் வருவார்களாதலால் அச்சமயத்தில்
திருவாவடுதுறையில் இருப்பது நல்லதன்று என எண்ணியே நான் சூரிய மூலை
செல்வதாக என் ஆசிரியரிடம் கூறினேன்.

விடை பெறுதல்

என் அசௌக்கியத்தையும் அதனால் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட
வருத்தத்தையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் பெரிய புராணப் பாடத்தை
நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

என்னை ஒரு பல்லக்கில் இருக்கச் செய்து சூரிய மூலைக்கு
அனுப்பினார். மூங்கில் வளைவுள்ள அப்பல்லக்கு மூடி இல்லாதது; அவசரத்தில்
வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. கண்ணை மூடியபடியே எல்லோரிடமும்
விடைபெற்றுக் கொண்டேன். பிள்ளையவர்களும் பிறரும் என்னைப் பார்த்து
மிகவும் விசனப்பட்டார்கள்.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல்
வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில்
நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு
மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன்.
பிள்ளையவர்கள் என்னுடன் ஹரிஹரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை
வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத்
திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை.
வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும்
இடையிலே உள்ள