பக்கம் எண் :

326என் சரித்திரம்

உணர்ந்து மாசி மாதம் 17-ஆம் தேதி (29-2-1873) புதன்கிழமை மாலை
என்னை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார்.

அப்பொழுது மடம் என்றும் இல்லாத கலகலப்போடு இருந்தது. மகா
மகத்திற்குப் போயிருந்த வித்துவான்களும் பிரபுக்களும் சுப்பிரமணிய
தேசிகரோடு திருவாவடுதுறைக்கு வந்திருந்தனர். எல்லோரும் அவரவர்களுக்கு
அமைக்கப் பெற்ற இடங்களில் தங்கியிருந்தனர்.

மடத்தில் கீழைச் சவுகண்டியில் பிள்ளையவர்கள் பலருக்கிடையே
இருந்து சம்பாஷணை செய்திருந்தனர். அவ்விடத்தை அணுகி ஆசிரியரைக்
கண்டேன். அப்போது என் உடம்பில் உள்ள அம்மை வடுக்களைக் கண்டால்
அவர் வருத்தமடைவாரென்று எண்ணி அவர் கண்களுக்குத் தெரியாதபடி
அதிகமாக விபூதியை உடம்பு முழுவதும் பூசியிருந்தேன். ஆசிரியர் என்னைக்
கண்டவுடன் மிக்க அன்போடு, “சாமிநாதையரா? இப்போது உடம்பு
சௌக்கியமாயிருக்கிறதா? உடம்பு முழுவதும் வடுத் தெரியாமல் விபூதி கவசம்
தரித்திருக்கிறது போல் தோற்றுகிறது. உம்முடைய ஞாபகமாகவே இருக்கிறேன்.
கண்ணப்ப நாயனார் புராணத்தோடே பெரிய புராணம் நின்றிருக்கிறது. மகாமக
காலத்தில் நீர் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருக்கும்”
என்று கூறினார். அப்பால் என் தந்தையாரைப் பார்த்து க்ஷேம சமாசாரங்களை
விசாரித்தார்.

இராமசாமி பிள்ளை

அப்போது மதுரை இராமசாமி பிள்ளை என்ற தமிழ் வித்துவானொருவர்
அங்கே இருந்தார். அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர். ஆறுமுக
நாவலரிடம் பழகியவர். தாம் இயற்றிய சில நூல்களைப் பிள்ளையவர்களிடம்
படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களைக் கேட்டு வந்தார். அவரைப் பற்றி
நான் சில முறை கேள்வியுற்றிருந்தேன். பிள்ளையவர்கள் அங்கிருந்தவர்களில்
ஒவ்வொருவரையும் எனக்கு பழக்கம் செய்வித்தார்.

ஆசிரியர் விருப்பம்

என் உடம்பில் மெலிவைக் கண்ட ஆசிரியர் என் தந்தையாரைப்
பார்த்து, “இவருக்கு இன்னும் நல்ல சௌக்கியமுண்டாகவில்லை. இங்கே ஆகார
வசதிகள் போதியபடி இல்லை. இவருடைய தாயார் இடும் உணவை உண்டுதான்
இவர் உடம்பு தேற வேண்டும். ஊரிலேயே இன்னும் சில தினங்கள் இருந்து
உடம்பு சௌக்கியமான