பக்கம் எண் :

என் தந்தையார் குருகுலவாசம் 33

கனம் கிருஷ்ணையர் இந்தச் சுபகாரியத்தை ஜமீன்தார்
உதவியைக்கொண்டு நிறைவேற்றுவது மிகவும் சுலபமென்று அறிந்தவர்.
அதனால்தான் என் பாட்டியாரிடம் அவ்வளவு உறுதியாகப் பேசினார். ஒருநாள்
தம் கருத்தை அவர் ஜமீன்தாருக்குத் தெரிவித்தார். எல்லோரையும் போலத்
தெரிவிக்கும் வழக்கந்தான் அவருக்கு இல்லையே. ஒரு செய்யுள் மூலமாக
அதனைத் தெரிவித்தார். அந்தச் செய்யுள் ஒரு கட்டளைக் கலித்துறை. அது
முற்றும் இப்போது கிடைக்கவில்லை.

“வன்ய குலோத்தமன் ரங்க மகீபன் வரிசைமைந்தா”

என்ற முதலடி மாத்திரம் என் சிறிய தந்தையார் எழுதி வைத்துள்ள
குறிப்பிலிருந்து கிடைத்தது. கனம் கிருஷ்ணையருடைய வேண்டுகோள்
நிறைவேறுவதில் தடையொன்றும் உண்டாகவில்லை. கச்சிக் கலியாணரங்கர்,
கலியாணத்துக்குப் பொருளுதவி செய்வதாக ஏற்றுக் கொண்டார். பெண்
நிச்சயமானவுடன் பணம் உதவுவதாக வாக்களித்தார். அது முதல் என்
தந்தையாருக்கு ஏற்ற பெண்ணை என் பாட்டியாரும் பாட்டனாரும் ஆராயத்
தொடங்கினர்.

இவ்வாறு இருக்கையில் திடீரென்று கனம் கிருஷ்ணையருக்கு வறள்வாயு
என்னும் ஒருவகை நோய் கண்டது. முதுமையினால் இயல்பாகவே அவருக்கு
உடல் தளர்ச்சியும் இருந்து வந்தது. அந்த நிலைமையில்
உடையார்பாளையத்திலே இருப்பதைக் காட்டிலும் தம்முடைய ஊராகிய
திருக்குன்றத்தில் போய் இருந்தால் நலமென்று அவருக்குத் தோன்றியது.
ஜமீன்தாரிடம் விடைபெற்றுக்கொண்டு திருக்குன்றம் சென்று இருக்கலானார்.
ஜமீன்தார் அக்காலங்களில் வேண்டிய பணமும் நெல் முதலியனவும் அனுப்பி
உதவி புரிந்தார். தக்கவர்களை அடிக்கடி விடுத்துச் செய்தியைத் தெரிந்து வரச்
செய்தார்.

கிருஷ்ணையர் திருக்குன்றம் சென்றபோது அவருடன் என்
தந்தையாரும் சென்றார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு
வேண்டிய பணிவிடைகளை எல்லாம் எந்தையார் செய்து வந்தார். அவருடைய
மெலிவைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். அவர் தம்மைப் பாதுகாத்து
வந்த அருமையை நினைக்கும் போதெல்லாம் விம்மினார்; அவருடைய கட்டு
வாய்ந்த அழகிய மேனிகுலைந்து தளர்ந்து வாடுவதைக்கண்டு அழுது
புலம்பினார்.

எந்தையாருடைய மன வருத்தத்தைக் கனம் கிருஷ்ணையர் அறிந்து,
“என்னுடைய வாழ்வு இவ்வளவுதான் என்று தோன்று