பக்கம் எண் :

எழுத்தாணிப் பாட்டு 331

இவ்வளவு நாட்களாகப் பழகுகிறோம். நம்மிடத்தில் எல்லோருக்கும்
மதிப்பிருக்கிறது என்பது இவருக்குத் தெரியும். இருந்தும் இவர் பணம் கொடுக்க
மறுக்கிறார். உலக இயல்பு இதுதான் போலும்! சமயத்திலேதான் ஜனங்களுடைய
இயற்கையை நாம் அறிகிறோம். அவர்களைச் சொல்வதில் என்ன பயன்?
நாமும் ஜாக்கிரதையாக இருந்து வரவேண்டும். துறவுக் கோலம் பூண்ட இவரே
இப்படி இருந்தால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?” என்று எண்ணி எண்ணி
அவர் வருந்தினார். வேறு சிலரையும் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் பயனில்லை.
ஆதீன கர்த்தர் பல சமயங்களில் விசேஷமான உதவி செய்திருத்தலாலும்,
மடத்தில் அப்போது பணச் செலவு மிகுதியாக இருந்தமையாலும் அவரிடம் தம்
குறையை நேரில் தெரிவித்துக் கொள்ள ஆசிரியருக்கு மனமில்லை. பொருள்
முட்டுப்பாட்டைத் தீர்த்துக்கொள்ள வழியில்லாமல் கலங்கிய அவருக்கு வேறு
எங்கேனும் போய்ச் சில காலம் இருந்து மனம் ஆறுதலுற்ற பின்பு வரலாம்
என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனால் தாம் சில வெளியூர்களுக்குப் போய்
வர எண்ணியிருப்பதைக் குறிப்பாக மாணாக்கர்களிடம் தெரிவித்தார்.

மாணாக்கர்களுக்கு ஆசிரியருடைய மனவருத்தத்திற்குக் காரணம்
இன்னதென்று தெரிந்தது. ஒவ்வொருவரும், “ஐயா அவர்கள் இவ்விடம் விட்டு
வெளியூருக்குச் சென்றால் நானும் தவறாமல் உடன் வருவேன்” என்று மிகவும்
உறுதியாகக் கூறினர். அவர்கள் உறுதி எந்த அளவில் உண்மையானதென்பது
பின்பு தெரிய வந்தது.

பட்டீச்சுரப் பிரயாணம்

பலவாறு யோசனை செய்து முடிவில் என் ஆசிரியர் பட்டீச்சுரம்
செல்வதாக நிச்சயித்துச் சுப்பிரமணிய தேசிகரிடம் பக்குவமாகத் தெரிவித்து
அனுமதிபெற்றனர். அம்சமயம் என் பெற்றோர்கள் திருவாவடுதுறையிலேயே
இருந்தார்களாதலின், பிரயாணம் நிச்சயமானவுடன் ஆசிரியர் என் பிதாவை
நோக்கி, “இன்னும் சில தினங்களில் ஒருநாள் பார்த்துக்கொண்டு பட்டீச்சுரம்
முதலிய இடங்களுக்குப் போய் வர எண்ணியிருக்கிறேன். இவ்விடம் திரும்பி
வர இன்னும் சில மாதங்கள் ஆகும். ஆதலால் நீங்களும் சாமிநாதையருடன்
புறப்பட்டு நான் போகும்போது பட்டீச்சுரத்துக்கு வந்து விடுங்கள். அங்கே சில
தினங்கள் தங்கியிருந்து பிறகு ஆவுடையார் கோயில் போகலாம்” என்று
கூறவே அவர் அதற்கு ஒருவாறு உடன்பட்டார். ஆனாலும் என் பெற்றோர்கள்
எங்களுடன் வருவதில் எனக்கு இஷ்டமில்லை. என் தந்தையாருடைய
நியமானுஷ்டானங்களுக்கு நாங்கள் போகும் இடங்களில் தக்க வசதி இராதென்ற