பக்கம் எண் :

எழுத்தாணிப் பாட்டு 333

எழுத்து வேலை

ஆசிரியர் பட்டீச்சுரத்திற்கு ஸ்ரீமுக வருஷம் வைகாசி மாதம் (மே, 1873)
போய்ச் சேர்ந்தார் விரைவில் திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றி
முடித்துவிட வேண்டுமென்ற வேகம் அவருக்கு இருந்தது. ஆகையால்
தினந்தோறும் விடாமற் புராணத்தில் சில பாடல்கள் இயற்றப் பெற்று வந்தன.
ஒரு முறை அவர் பாடல் சொல்லுவதை ஏட்டில் எழுதுவதும் பிறகு
எழுதியதைப் படித்துக் காட்டி அவர் சொல்லிய திருத்தங்களைக் குறித்துக்
கொண்டு மீட்டும் வேறு ஏட்டில் நன்றாக எழுதுவதுமாகிய வேலைகள் எனக்கு
இருந்தன. இவ்வேலையால் நான் தனியே நூல்களைப் பாடம் கேட்க
இயலவில்லை. ஆயினும் அப்புராணச் செய்யுட்களை எழுதியதும்,
இடையிடையே அச்செய்யுட்களின் சம்பந்தமாக ஆசிரியர் கூறியவற்றைக்
கேட்டதும் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

புராணம் இயற்றும் இடங்கள்

பிற்பகல் வேளைகளில் பிள்ளையவர்கள் மேலைப் பழையாறை,
பட்டீச்சுரம் ஆலயம், திருச்சத்திமுற்றம் கோயில் முதலிய இடங்களுக்குச்
சென்று சில நேரம் தங்கியிருப்பார். நான் எப்போதும் ஏடும் எழுத்தாணியும்
கையில் வைத்துக்கொண்டே இருப்பேன். குளிர்ந்த வேளைகளில்
அக்கவிஞருக்கு ஊக்கம் உண்டாகும்போது புராணச் செய்யுட்கள் வெகு
வேகமாக நடைபெறும். இயற்கைக் காட்சிகள் அமைந்த இடமாக இருந்தால்
அவருக்கு உத்ஸாகம் பின்னும் அதிகமாகும். பட்டீச்சுரத்தில் உள்ள
திருமலைராயனாற்றங்கரையில் ஓர் அரசமரம் உண்டு. அதன் கீழே ஒரு
மேடை இருந்தது. ஆற்றை நோக்கியபடி அம்மேடையில் சில வேளைகளில்
அவர் உட்கார்ந்து கொண்டு பிற்பகலில் செய்யுட்களைச் சொல்லுவார்.
அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் கற்பனா சக்தியே தனிச்
சிறப்புடையது.

பெரும்பாலும் காலை வேளைகளிலும் பிற்பகல் நேரங்களிலுமே புராணச்
செய்யுட்களைச் சொல்லுவார். பகற் போசனம் ஆனவுடன் சிறிது நேரம்
அவருக்கு அயர்ச்சியாக இருக்கும். அக்காலங்களில் நான் பாடல்களை ஏட்டில்
பிரதி செய்வேன்.

எழுத்தாணியின் மறைவு

ஒருநாள் காலையில் மேலைப்பழையாறையில் ஆசிரியர் பாடல்கள்
சொல்ல நான் எழுதி வந்தேன். அதனை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு என்னைக்
காலையாகாரம் செய்துவரும்படி அவர் அனுப்பினார். நான்