பக்கம் எண் :

சிறு பிரயாணங்கள் 335

தரவேண்டுமென்று ஒரு செய்யுள் புதியதாக இயற்றிச் சொல்லட்டும்;
நான் அதை வருவித்துத் தருகிறேன்” என்று உத்தரவு செய்தார். நான்
கதிகலங்கி நின்ற நிலையில் செய்யுளைப் பற்றி யோசிக்கும் மன நிலை ஏது?
“தம்பி சொல்லுகிறபடி ஒரு செய்யுள் சொல்லும்” என்று ஆசிரியர்
கட்டளையிடவே நான் யோசிக்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக
ஆறுமுகத்தா பிள்ளை எதிரே இருந்த தோட்டத்திற்குச் சென்றார். அச்சமயம்
பார்த்து என் ஆசிரியர் முதலில், ‘எழுத்தாணி யொன்றெனக்கின் றீ” என்று
ஒரு வெண்பாவின் இறுதி அடியைச் சொன்னார். தொடர்ந்து சிறிது சிறிதாக
இறுதியிலிருந்தே முதலடி வரையில் சொல்லி முடித்தார். அவ்வெண்பா
முழுவதையும் நான் பாடம் பண்ணிக் கொண்டேன். ஆறுமுகத்தா பிள்ளை
வந்தவுடன்,

“தழுவுபுகழ் ஆறுமுகத் தாளாளா என்றும்
வழுவில் புராணம் வரைய-மெழுகில்
அழுத்தாணிப் பொன்னால் அமைந்தஉரு விற்றாம்
எழுத்தாணி ஒன்றெனக்கின் றீ”

என்ற அவ்வெண்பாவைச் சொன்னேன். அவருக்குத் திருப்தி
உண்டயிற்றோ, இல்லையோ நான் அறியேன். சிறிது நேரத்தில் என்
எழுத்தாணி என்னிடம் வந்து சேர்ந்தது.

இந்நிகழ்ச்சியால் பிள்ளையவர்களுடைய மனம் புண்பட்டது. “இந்த
உலகத்தில் நம் மனமறிந்து அன்பு பாராட்டுபவர்கள் எங்கும் இல்லையே!
வெறும் சோற்றை உத்தேசித்து எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாக
வேண்டியிருக்கிறது!” என்று வருத்தமுற்றார்.

அத்தியாயம்-55

சிறு பிரயாணங்கள்

நான் பட்டீச்சுரம் சென்ற பின் என் தாய் தந்தையர் சூரிய மூலையில்
ஒருவாரம் இருந்துவிட்டு உத்தமதானபுரத்துக்குச் சென்று அங்கே என் சிறிய
தந்தையார் முதலியவர்களுடன் வசிக்கலானார்கள். பட்டீச்சுரத்திலிருந்து ஒரு
முறை என் ஆசிரியரும் ஆறுமுகத்தா பிள்ளையும் திருவலஞ்சுழி, ஆவூர்,
நல்லூர் முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள்.
நானும் உடன் சென்றேன்.