பக்கம் எண் :

342என் சரித்திரம்

இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும்
விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார்.
அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று
என் தாய் தந்தையரோடு இருந்து வரலானேன். என் சிறிய தகப்பனாருடைய
வருவாய் போதாமையால் குடும்பம் மிக்க சிரமத்தோடு நடைபெற்று வந்தது.
அக்குடும்ப நிலை திருந்தவேண்டுமாயின் என் தந்தையார் மீட்டும் ஊர் ஊராக
அலைந்து தம் சங்கீதத் திறமையாலே பொருளுதவி பெற வேண்டும். அவர்
எவ்வளவு காலந்தான் கஷ்டப்படுவார்! எனக்கு ஏதேனும் உத்தியோகமோ
வேறு வகையில் வருவாயோ கிடைத்தால்தான் நிரந்தரமான சௌக்கியம்
குடும்பத்துக்கு உண்டாகுமென்பதை நான் உணர்ந்தேன். உணர்ந்து என்
செய்வது!

நெல் வேண்டிய செய்யுள்

நான் வேறிடத்தில் இருந்தபோது எனக்குக் குடும்பத்தின் கஷ்டம்
அதிகமாகத் தெரியவில்லை. கண் முன்னே பார்க்கும்போது தான், “நாம்
இருந்தும் ஒரு பயனும் இல்லாமற் போகிறதே!” என்ற வருத்தம் உண்டாயிற்று,
“இப்பொழுது நம்மால் ஆன சௌகரியத்தைச் செய்து வைப்போம்” என்று
யோசித்தபோது எனக்கு ஒரே ஒரு வழி தோற்றியது,

எங்கள் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைப் பிள்ளையாம் பேட்டை
என்ற ஊரில் ஐயாக்கண்ணு மூப்பனார் என்ற செல்வர் ஒருவர் இருந்தார்.
அப்பக்கங்களில் அவருக்கு மிக்க செல்வாக்கு உண்டு. அவர் என்
தந்தையாரிடம் அன்புடையவர். அவரிடம் சென்று நெல் வேண்டுமென்ற
கருத்துடைய செய்யுளொன்றை இயற்றிச் சொல்லி அதன் பொருளையும்
கூறினேன். பிறரிடம் ஒரு பொருளை விரும்பி நான் பாடிய முதற் செய்யுள்
அது. என் பாடலைக் கேட்டவுடன் அவர் மகிழ்ந்து நான்கு கலம் நெல்லை
அனுப்பினார். என் பெற்றோர்கள் அதனால் மிகவும் திருப்தியுற்றார்கள்.
அப்பாடல் இப்போது ஞாபகத்தில் இல்லை.

கலைமகள் துதி

திருப்பெருந்துறைப் புராணத்தை என் ஆசிரியர் இயற்றிக் கொண்டு
வந்த சந்தர்ப்பமாதலின் என் மனம் அவர் கவித்துவத்தில் ஒன்றிப்
போயிருந்தது. நானும் செய்யுள் இயற்றும் முயற்சியில் ஈடுபடலானேன்.
உத்தமதானபுரத்தில் தங்கியபோது எனக்கு ஓய்வு இருந்தமையால் அம்முயற்சி
அதிகமாயிற்று. தனிப்பாடல்கள் பல