பக்கம் எண் :

திருப்பெருந்துறை 351

கோலத்துடன் அம்பிகையின் யோகத்தைப் பாதுகாப்பவராகச்
சிவாஞ்ஞையால் அங்கே எழுந்தருளியிருக்கிறாரென்பது புராண வரலாறு. அம்
மூர்த்தியை வழிபட்டுப் பேய்பிடித்தவர்களும் வேறு விதமான துன்பங்களை
அடைந்தவர்களும் சௌக்கியம் பெறுவார்கள்

சிற்பம்

கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக அருமையானவை. சிற்பவேலை
செய்பவர்கள் இன்ன இன்ன இடத்திலுள்ள இன்ன இன்ன அமைப்புக்கள் மிகச்
சிறந்தவையென்றும், அவற்றைப் போல அமைப்பது அரிதென்றும் கூறுவார்கள்.
அங்ஙனம் கூறப்படும் அரிய பொருள்களுள் ‘திருப்பெருந்துறைக்
கொடுங்கை’யும் ஒன்று. கல்லாலே அமைந்த சங்கிலி முதலிய விசித்திர
வேலைப்பாடுகள் பல அங்கே உள்ளன.

வந்த வித்துவான்கள்

இவற்றைப் போன்ற பல சிறப்புக்களை உடைமையால் அந்த ஸ்தலம்
சிவபக்தர்களால் அதிகமாகப் போற்றப்பட்டு வருகிறது. நாங்கள்
சென்றிருந்தபோது திருவாதிரைத் தரிசனத்துக்காக வந்திருந்தவர்களில் பலர்
என் ஆசிரியரிடம் பேரன்பு பூண்டவர்கள்.

தேவகோட்டையிலிருந்து வன்றொண்டச் செட்டியாரும், வேம்பத்தூரிலி
ருந்து சிலேடைப்புலி பிச்சுவையரும், சிங்கவனத்திலிருந்து சுப்பு
பாரதியாரென்பவரும், மணல் மேற்குடியிலிருந்து கிருஷ்ணையரென்பவரும்
வந்திருந்தார்கள். இவர்கள் யாவரும் பிள்ளையவர்களைக் கண்டு அளவற்ற
சந்தோஷத்தை அடைந்தார்கள்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு நாங்கள் எங்களுக்காக ஏற்பாடு
செய்யப்பெற்றிருந்த விடுதிக்குச் சென்று தங்கினோம். வன்றொண்டர்
முதலியோர் வந்து ஆசிரியரோடு சல்லாபம் செய்தார்கள்.

வன்றொண்டரென்பவர் தனவைசிய வகுப்பினர்.
கண்பார்வையில்லாதவர். தீவிரமான சிவபக்தியும் கடினமான
நியமானுஷ்டனங்களும் உடையவர். தமிழ்வித்துவான். சிறந்த ஞாபக
சக்தியுள்ளவர். பிள்ளையவர்களிடத்திலும் ஆறுமுக நாவலரிடத்திலும் பாடம்
கேட்டவர். எதையும் ஆழ்ந்து படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்
இயல்புடையவர். பிள்ளையவர்களிடத்தில் அவருக்குப் பெருமதிப்பு இருந்தது.