பக்கம் எண் :

எனக்கு வந்த ஜ்வரம் 357

முதலில் சாதாரணமான ஜ்வரமாக இருக்குமென்று எண்ணினேன். எனது
பொல்லாத காலம் பலமாக இருந்தமையால் அது கடுமையாகத்தானிருந்தது.
பாடல்களை எழுதுவதையும் அரங்கேற்றுகையில் படிப்பதையும் நான்
நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. படுத்த படுக்கையாக இருந்தேன்.

ஆசிரியர் வருத்தம்

என் ஆசிரியர் திருப்பெருந்துறைக்கு வந்தது முதல் உத்ஸாகத்தோடு
இருந்தார். பல அன்பர்களுடைய சல்லாபமும் அங்கே நடைபெற்று வந்த
உபசாரங்களுமே அதற்குக் காரணம். தினந்தோறும் காலை முதல் இரவு
நெடுநேரம் வரையில் தம்மைப் பாராட்டி ஆதரவு செய்வோருடைய
கோஷ்டியினிடையே இருந்து பழகியதனால் துன்பத்தை உண்டாக்கும் வேறு
ஞாபகம் எழுவதற்கு நேரமில்லை.

இடையே எனக்கு உண்டான நோய் அவருடைய அமைதியான
மனநிலையைக் கலக்கி விட்டது. நான், “என் துரதிருஷ்டம் இப்படி நேர்ந்தது”
என்று நினைத்தேன். அவரோ, “அரச மரத்தைப் பிடித்த பேய்,
பிள்ளையாரையும் பிடித்ததுபோல என்னைப் பிடித்த சனியன் என்னைச்
சேர்ந்தவர்களையும் துன்புறுத்துகிறதே” என்று சொல்லி வருத்தமுற்றார்.

புராண அரங்கேற்றம் நடைபெறாத காலங்களில் என் அருகிலேயே
இருந்து கவனித்து வந்தார். தக்க வைத்தியர்களைக் கொண்டு பரிகாரம் செய்யச்
சொன்னார். அவர்பால் அன்பு வைத்துப் பழகியவரும் அங்கே போலீஸ்
இன்ஸ்பெக்டர் உத்தியோகத்தில் இருந்தவருமாகிய ஸ்ரீ சட்டைநாத
பிள்ளையென்பவர் சில நல்ல மருந்துகளை வருவித்து அளித்தார். ஜ்வரம்
நீங்கினபாடில்லை.

நான் நோய்வாய்ப் பட்டமையால் என் ஆசிரியர் சொல்லும்
பாடல்களைப் பெரியண்ணம்பிள்ளை என்பவர் ஏட்டில் எழுதி வந்தார்.
அரங்கேற்றம் நடைபெறுகையில் பாடல்களை வாசிக்கும் பணியைச் சிவகுருநாத
பிள்ளையாக மாறிய சவேரிநாதபிள்ளை ஏற்றுக்கொண்டார்.

பிள்ளையவர்களுக்கு என் அசௌக்கியத்தால் எண்டான மன வருத்தம்
யாவருக்கும் புலப்பட்டது. ஒவ்வொரு நாளும் அரங்கேற்றம் நிகழ்ந்த
செய்தியைச் சவேரிநாதபிள்ளை எனக்கு வந்து சொல்வார். பிள்ளையவர்களும்
சொல்வதுண்டு.

ஒருநாள் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து சுப்பிரமணியமணியத்
தம்பிரானுக்கு அரங்கேற்றத்தைப்பற்றி விசாரித்துத்