பக்கம் எண் :

அம்பரில் தீர்ந்த பசி 369

தைப் படிக்கப் படிக்க அதில் என் மனம் பதிந்தது. திருவிளையாடற்
புராணப் பிரசங்கம் செய்யும்போது இடையிடையே மேற் கோளாகக் கம்ப
ராமாயணத்திலிருந்து பாடல்களைச் சொல்லிப் பொருள் உரைப்பேன்.
இப்பழக்கத்தால் இராமாயணத்தில் எனக்கு ஊற்றம் உண்டாயிற்று. என்
ஆசிரியரிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தவுடன் எப்படியேனும் இராமாயண
முழுவதையும் பாடம் கேட்டுவிட வேண்டும் என்று உறுதி கொண்டேன்.

களத்தூர் முகம்மதியர்

சில நாட்களில் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று முன்பே
பழக்கமானவர்களைப் பார்த்து வருவேன். ஒரு நாள் களத்தூருக்குச் சென்றேன்.
அங்கே தமிழ் படித்த முகம்மதிய வயோதிகர் சிலர் இருந்தனர். அவர்களோடு
பேசுகையில் அவர்களுக்கிருந்த தமிழபிமானத்தின் மிகுதியை உணர்ந்து
வியந்தேன். கம்பராமாயணம், அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களிற் பல
அரிய பாடல்களை அவர்கள் தங்கு தடையின்றிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
பாடல்களை அவர்கள் சொல்லும்போதே அவர்களுக்கு அப்பாடல்களில்
எவ்வளவு ஈடுபாடு உண்டென்பது புலப்படும். நான் பிள்ளையவர்களிடத்தில்
இருந்ததை அறிந்தவர்களாதலின் என்பால் வந்து அவர்கள் மொய்த்துக்
கொண்டார்கள்; ஆசிரியர் புகழையும் கவித்துவ சக்தியையும் கேட்டுக் கேட்டு
மகிழ்ந்தனர். சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் அவர்களுடைய
தமிழனுபவத்துக்கு இடையூறாக நிற்கவில்லை. தமிழ்ச்சுவையை நுகர்வதில்
அவர்கள் உள்ளம் என் உள்ளத்தைக் காட்டிலும் அதிக முதிர்ச்சியைப்
பெற்றிருந்தது.

புராணப் பிரசங்கம் நடந்தது. நாளுக்கு நாள் ஜனங்களுடைய
உத்ஸாகமும் ஆதரவும் அதிகமாயின. எனக்குப் பிரசங்கம் செய்யும் பழக்கம்
வன்மை பெற்றது. இந்நிலையில் என் மனம் மாத்திரம் இடையிடையே
வருத்தமடைந்தது; ஆசிரியரைப் பிரிந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

சூரிய மூலையிலிருந்து புறப்பட்டபோதே பிள்ளையவர்களுக்கு ஒரு
கடிதம் எழுதினேன். செங்கணத்துக்குப் புறப்படும் செய்தியை அதில்
தெரிவித்திருந்தேன், காரைக்கு வந்த பிறகும் ஒரு கடிதம் எழுதினேன்.
அக்கடிதத்தின் தலைப்பில் ஒரு செய்யுள் எழுதியிருந்தேன். திருவிளையாடற்
புராணத்தின் நினைவு என்னுள்ளத்தே பதிந்திருந்தது. அதனால், சொல்வடிவாக
ஸ்ரீ மீனாட்சியும் பொருள்