‘பிரிந்தவர் கூடினால்’ ஆசிரியர் விழித்துக் கொண்டார். அவருடைய குளிர்ந்த அன்புப் பார்வை என் மேல் விழுந்தது. “சாமிநாதையரா?” “ஆம்.” அப்பால் சில நிமிஷங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை; பேச முடியவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. என் கண்களில் நீர்த்துளிகள் மிதந்து பார்வையை மறைத்தன. “சௌக்கியமா?” என்று ஆசிரியர் கேட்டார். “சௌக்கியம்” என்றேன். நான் ஒரு குற்றவாளியைப் போலத் தீனமான குரலில் பதில் சொன்னேன். “போய் அதிக நாள் இருந்து விட்டீரே!” என்று ஆசிரியர் சொன்னார். அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்! குடும்பக் கஷ்டத்தால் அவ்வாறு செய்ய நேர்ந்ததென்றும், ஒவ்வொரு நாளும் அவரை நினைந்து நினைந்து வருந்தினேனென்றும் சொன்னேன். “இவர் இன்னும் சாப்பிடவில்லை” என்று காரியஸ்தர் இடையே தெரிவித்தார். நான் சாப்பிடவில்லையென்பது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. “சாப்பிடவில்லையா! முன்பே சொல்லக் கூடாதா? முதலிலே போய்ச் சாப்பிட்டு வாரும்” என்று ஆசிரியர் கட்டளையிட்டார். போய் விரைவில் போஜனத்தை முடித்துக் கொண்டு வந்தேன். பிறகு இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். பத்து மாதங்களாக அடக்கி வைத்திருந்த அன்பு கரை புரண்டு பொங்கி வழிந்தது. என் உள்ளத்தே இருந்த பசி ஒருவாறு அடங்கியது. ஆசிரியர் கடன் தொல்லையிலிருந்து நீங்கவில்லை என்று நான் தெரிந்து கொண்டேன். அம்பர்ப் புராணம் அரங்கேற்ற வந்ததற்கு அங்கே பொருளுதவி பெறலாமென்ற எண்ணமே காரணம் என்று ஊகித்து உணர்ந்தேன். அவரது கஷ்டம் காரையிலும் அயலூர்களிலும் உள்ள அன்பர்களுடைய உத்தம குணங்களை நான் எடுத்துச் சொன்னேன். ஆசிரியர் கவனத்துடன் கேட்டார். அவருக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. திடீ |