பக்கம் எண் :

இரட்டைத் தீபாவளி 387

தரித்துக் கொண்டேன். தீபாவளி எனக்கு இரண்டு தடவை ஏற்பட்டது.
திருவாவடுதுறையில் எல்லாரோடும் ஸ்நானம் செய்து யாவருக்கும் பொதுவான
தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று மாயூரத்தில் ஆசிரியர்
முன்னிலையில் அவர் அன்புப் பார்வையில் மூழ்கி அவர்தம் அருமைக்கையால்
அளித்த வஸ்திரத்தைத் தரித்து ஒரு தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று
எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, “இப்போது எவ்வளவு நன்றாக
இருக்கிறது!” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார். அப்போது நெடுநாளாக
இருந்த குறை ஒன்று நீங்கப் பெற்றவரைப் போலவே அவர் தோன்றினார்.

நான் வந்த காரியத்தை மெல்ல அவரிடம் சொன்னேன். “இன்னும் சில
தினங்கள் இங்கே இருந்து விட்டுப் போகலாம் நீரும் இரும்” என்று அவர்
சொல்லவே, அங்ஙனமே சில தினங்கள் மாயூரத்தில் தங்கியிருந்தேன்.

இராமாயணப் புஸ்தகங்கள்

ஒரு நாள் மாயூரம் கடைவீதியில் ஓரிடத்தில் இராமாயணம்
ஏழுகாண்டங்களும் ஒருவன் விற்றுக் கொண்டிருந்தான். இராமாயண பாடம்
நடைபெற்று வந்த சமயமாதலாலும் நெடுநாட்களாக இரவல் புஸ்தகத்தைப்
படித்து வந்தமையாலும் அவற்றைக் கண்டவுடனே வாங்கிவிட வேண்டுமென்ற
ஆவல் உண்டாயிற்று. அந்த ஆவலைப் பூர்த்தி செய்துகொள்ள என்னிடம்
பணம் இல்லை. விலையை விசாரித்தேன். “ஏழு ரூபாயில் ஒரு பைசா கூடக்
குறையாது” என்று கடைக்காரன் சொன்னான். எப்படியாவது அப்புஸ்தகங்களை
வாங்கிவிட வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. ஒரு வழியும் தோற்றவில்லை.

பிறகு அங்கிருந்து நேரே திருவாவடுதுறைக்கு ஓட்டமும் நடையுமாகச்
சென்று என் சிறிய தகப்பனாரிடம் விஷயத்தைச் சொல்லிப் பணம் கேட்டேன்,
அப்பொழுதுதான் சம்பளம் அவருக்கு வந்திருந்தது. சம்பளமே ஏழு
ரூபாய்தான்: அவர் சிறிதும் தடை சொல்லாமல் என் கையில் அதைக்
கொடுக்கவே மீட்டும் மாயூரத்திற்கு வந்து கடைக்காரனிடம் போய்க் கம்ப
ராமாயணம் ஆறு காண்டங்களையும் உத்தர காண்டத்தையும் பெற்றுக்
கொண்டேன். திருவாவடுதுறைக்குப் போய் வந்ததனால் உண்டான இளைப்பு
அப்புஸ்தகங்களைப் பெற்ற சந்தோஷத்தில் மறைந்து விட்டது.