பக்கம் எண் :

390என் சரித்திரம்

ஜமீன்தாரின் மைத்துனரும் கல்லையென்னும் ஊரில் இருந்தவருமான
முத்துசாமி நயினார் என்பவர் என் தகப்பனாரை ஆதரித்து வந்தார்.
பிள்ளையவர்களின் தேக அசௌக்கியத்தை நான் என் தந்தையாருக்கு ஒரு
கடிதமூலம் தெரிவித்தேன். அதைக் கண்டவுடன் அவர் என் அன்னையாரையும்
அழைத்துக் கொணடு திருவாவடுதுறை வந்து என் சிறிய தாயார் வீட்டில்
ஜாகை வைத்துக்கொண்டு தங்கியிருந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் என்பால் வைத்துள்ள அன்பினால் நான் எந்தப்
பொருளை எந்தச் சமயம் கேட்டாலும் மடத்து அதிகாரிகள் வழங்கி வந்தனர்.
அதனால் என் தாய் தந்தையருக்கு வேண்டியவை யாதொரு சிரமுமில்லாமல்
கிடைத்தன.

பொன் மொழிகள்

ஆசிரியர் பாடம் சொல்வதை நிறுத்திவிட்டாலும் நாங்கள் ஏதேனும்
சந்தேகம் கேட்கும்போது அதை விளக்குவார். அவருக்குப் பிரியமான
நூல்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு வந்தார். நானே படித்து வந்தேன்.

ஆசிரியர் படுக்கையிற் படுத்துக் கொண்டிருப்பார். அவரருகில் அமர்ந்து
சவேரிநாத பிள்ளை கால் கைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டே
இருப்பார். நான் அருகில் உட்கார்ந்து தேவாரத்தையோ திருவாசகத்தையோ
ஆசிரியர் காதில்படும்படி படிப்பேன். வேறு மாணாக்கர்களும் ஆசிரியரைப்
பார்க்க வரும் அன்பர்களும் சுற்றிலும் இருப்பார்கள். எல்லோருடைய
கண்களும் ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தும்.

தேவாரம் படித்து வரும்போதே இடையே எனக்கு ஒரு சந்தேகம்
உண்டாகும்; அதை ஆசிரியரிடம் கேட்பேன். அவர் சில வார்த்தைகளால்
விளக்குவார். இடையிடையே நிறுத்தி நிறுத்திச் சொல்லி விளக்குவார்.
தேவாரத்திலும் திருவாசகத்திலும் நெடுங்காலமாக ஆராய்ச்சி செய்தவராதலின்
நான் சந்தேகம் கேட்கும் போது அவர் கூறும் விடை பெரிய
புதையலைப்போலத் தோற்றும். விஷயத்தின் பெருமை மாத்திரம் அதற்குக்
காரணமன்று. எல்லாம் ஒடுங்கிய நிலையிலும் தமிழுணர்வு ஒடுங்காமல்
ஆசிரியர் சொல்வனவாதலின் அவை அதிக மதிப்புடையனவாயின. “ஆசிரியர்
கடைசிக் காலத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை” என்ற ஞாபகம் உள்ளே
இருந்தமையால் அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் கருத்தூன்றிக் கவனித்துக்
கேட்டேன். அப்படிக் கேட்கும் ஒவ்வொரு சமயத்திலும் எதிர்கால ஞாபகம்
வந்து