பக்கம் எண் :

400என் சரித்திரம்

வருவார். தேசிகர் நாள்தோறும் இராத்திரி இரண்டாம் கால
தரிசனத்திற்குக் கோயிலுக்கு வருவதுண்டு. அக்காலத்தும் என் தந்தையார்
மடத்திற்குச் சென்று, கூடவே கோயிலுக்கு வந்து தரிசித்து விட்டுத் தேசிகரை
மடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டிற்கு வருவார். இவற்றால்
தேசிகருக்கும் என் தந்தையாருக்கும் பழக்கம் அதிகமாயிற்று.

சிவபூஜைக்கு வேண்டிய பத்திர புஷ்பங்கள் மிகுதியாகக்
கிடைத்தமையாலும், மற்றச் சௌகரியங்களும் குறைவின்றி இருந்தமையாலும்
திருவாவடுதுறை வாசம் என் தந்தையார் மனத்துக்கு மிக்க உவப்பைத் தந்தது.
தேசிகருடைய அரிய குணங்களை அறிந்து, “இம்மாதிரி இடத்தையும்
மனுஷ்யர்களையும் நான் எங்கும் பார்த்ததே இல்லை” என்று விம்மிதம்
அடைந்தார்.

அத்தியாயம்-65

தேசிகர் சொன்ன பாடங்கள்

மாசி மாதம் மகாசிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. என் தந்தையார்
இராத்திரி நான்கு சாமத்திலும் அபிஷேக அர்ச்சனைகள் செய்வார். அவருடைய
பூஜைக்கு வேண்டிய தேங்காய்களை மடத்திலிருந்து பெறுவதற்காக நான்
தேசிகரிடம் சென்றேன். விசேஷ காலங்களில் அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள்
தங்கள் வீட்டிற் செய்யும் பூஜை முதலியவற்றிற்கு உபயோகித்துக் கொள்ளும்படி
இளநீர் தேங்காய் பழம் வஸ்திரம் சந்தனக்கட்டை முதலியன மடத்திலிருந்து
அவர்களுக்கு அளிக்கப்படும். கடையில்லாமையால் அவற்றை வேறு எங்கும்
வாங்க இயலாது.

சிவராத்திரி நிகழ்ச்சிகள்

நான் தேசிகரிடம் சென்றபோது அங்கே தியாகராஜ சாஸ்திரிகள்
இருந்தார். ஏதோ சம்பாஷணை நடந்தது. எனக்கு வேண்டிய பொருளைக்
கேட்கத் துணிவின்றி அங்கே நிற்கவே என் முகக் குறிப்பினால் நான்
எதையோ பெறும்பொருட்டு வந்திருக்கிறேனென்பதை அறிந்த தேசிகர், “என்ன
விசேஷம்? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார். நான் என் தந்தையாரது
பூஜைக்கு இளநீர்களும் தேங்காய்களும் வேண்டுமென்பதை அறிவித்தேன்.