பக்கம் எண் :

404என் சரித்திரம்

கேட்ட பிறகுதான் விருத்தியுரை தெளிவாக விளங்கும்” என்று
சொல்லிச் சிவஞான முனிவர் தம் கரத்தாலேயே திருத்திய ஏட்டுப் பிரதி
ஒன்றை எடுத்துக் காட்டினார். அப்பிரதியில் அங்கங்கே அடித்தும் கூட்டியும்
மாற்றியும் அம்முனிவர் எழுதியவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம்.

தேசிகர் கட்டளைப்படியே இலக்கணக் கொத்து முதலிய மூன்று
நூல்களையும் பாடம் கேட்டுப் பிறகு நன்னூல் விருத்தியுரையைக் கேட்கத்
தொடங்கினோம். சங்கர நமச்சிவாயர் உரைமாத்திரம் இருந்த ஏடொன்று
மடத்தில் இருந்தது. அதையும் வைத்துக் கொண்டு எங்கெங்கே சிவஞான
முனிவர் விருத்தியுரையில் திருத்தம் செய்திருக்கிறாரோ அங்கெல்லாம் ‘சி’
என்ற அடையாள மிட்டுக் குறித்துப் படித்தோம்.

வேறு இலக்கண நூல்கள்

யாப்பருங்கலக் காரிகை பாடம் கேட்டபோது அந்நூலின்
அவதாரிகையிலே உள்ள விஷயங்களை விரிவாக எடுத்துச் சொல்லி
விளக்கினார். அதுவரையில் யாரும் அவ்விஷயங்களைத் தெளிவாகச்
சொன்னதில்லை. தண்டியலங்காரம் கேட்டோம். காவ்யாதர்சமென்ற வடமொழி
நூலின் மொழி பெயர்ப்பாகிய அதனைப் பாடம் சொல்லும்போது வடமொழி
நூலிலுள்ள சுலோகங்களை எடுத்துச் சொல்லி விளக்குவார். விசாகப்
பெருமாளையர் எழுதிய அணியிலக்கணத்தைப் பாடங் கேட்டோம். அது
வடமொழியிலுள்ள குவலயானந்தத்தைத் தழுவியது. அதன் அமைப்பையும்
உதாரணச் செய்யுட்களையும் தேசிகர் பாராட்டுவார்.

அணியிலக்கணங்களைப் படித்து வருகையில் அவற்றிற் கூறப் பெற்ற
அணிகளை நான் அமைத்துத் தேசிகர் விஷயமாகப் புதிய செய்யுட்களை எழுதி
அவரிடம் காட்டுவேன். அவர் கேட்டு மகிழ்ந்து பிழையிருப்பின்
எடுத்துரைத்துத் திருத்துவார்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம்
சேனாவரையர் உரை, இலக்கண விளக்கம் என்பவற்றை நாங்களாகப் படித்து,
சில சந்தேகங்களை நீக்கிக் கொண்டோம். சேனாவரையர் உரையில் உள்ள
சந்தேகங்களை விளக்கும்போது தேசிகருக்கு அளவிறந்த உத்ஸாகம்
உண்டாகும். “இவர் உரை எழுதுவதைப் போல் இலக்கண நூலுக்கு யாரும்
எழுதமுடியாது. ஸம்ஸ்கிருத ஞானம் நன்றாக இருப்பதால் பல அருமையான
விஷயங்களைக் காரண காரியத்தோடு நியாயங் காட்டி எழுதுகிறார்” என்று
அவ்வுரையைப் பாராட்டுவார்.