பக்கம் எண் :

மடத்திற்கு வருவோர் 407

என்னிடம் பாடம் கேட்டவர்களிற் சிலர் என்னைக் காட்டிலும்
பிராயத்தில் முதிர்ந்தவர்கள். ஆனாலும் அவர்கள் என்னிடத்தில் மிக்க
மரியாதையோடும் அன்போடும் பழகி வந்தார்கள்; யாவரும் எனக்கு
எவ்விதமான குறையும் வாராமல் பாதுகாக்கும் இயல்புடையவராகவே
இருந்தார்கள்.

அண்ணாமலை ரெட்டியார்

காவடிச்சிந்தை இயற்றியவராகிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்
அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் தமிழ் படிக்கலாமென்று வந்தார்.
சேற்றூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் என்பவர் அவரை அழைத்து வந்தார்.
சுப்பிரமணிய தேசிகர் அவரை என்பால் ஒப்பித்தார். நான் அவருக்கு
நன்னூலும், மாயூரப் புராணமும் பாடம் சொல்லி வந்தேன். அப்பொழுதே
அவரிடத்தில் செய்யுள் இயற்றும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. யமகம்,
மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புக்களோடு செய்யுட்களை வெகு
விரைவில் இயற்றுவார். அவர் பாடம் கேட்டு வந்த போது இலக்கணத்தில்
அவருக்கு மனம் செல்லவில்லை; சில காலம் இருந்துவிட்டு விடைபெற்றுத் தம்
ஊருக்குப் போய்விட்டார்.

தந்தையார் விருப்பம்

என்னுடன் இருந்த தந்தையார் மீண்டும் உடையார் பாளையம் பக்கம்
போக எண்ணினார். ஒரு வேலையுமில்லாமல் திருவாவடுதுறையில் சும்மா
இருக்க அவர் விருப்பவில்லை. என்னையும் உடனழைத்துச் செல்ல
வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு இருந்தது. புராணப் பிரசங்கங்கள்
செய்துகொண்டு நான் குடும்ப வாழ்க்கையை நடத்தி வரவேண்டுமென்ற
அபிப்பிராயம் அவருக்கு மாறவில்லை. “இந்த ஊரில் நீ இப்படியே இருந்தால்,
நாங்கள் எங்கே இருப்போம்? உனக்கோ கலியாணமாகிவிட்டது. நீ குடும்பம்
நடத்த வேண்டாமா? இது நல்ல இடந்தான். மனிதனுக்குச் சாப்பாடு மட்டும்
போதுமா? எவ்வளவு நாள் நாங்கள் உன்னைப் பிரிந்து ஊர் ஊராகத் திரிந்த
வாழ்வோம்? பண்டார சந்நிதிகளிடம் விடைபெற்று உன்னையும் அழைத்துப்
போகலாமென்று எண்ணியிருக்கிறேன்” என்று அவர்சொன்னார். அவ்விதம்
செய்யலாமென்றோ வேண்டா மென்றோ நான் சொல்லவில்லை.
திருவாவடுதுறையை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை. தாய்தந்தையரைப்
பிரிந்திருப்பதும் வருத்தமாக இருந்தது. எதையும் துணிய மாட்டாமல்
இருந்தேன்.

தேசிகர் ஆதரவு

இப்படி இருக்கையில் ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகரிடம் என்
தந்தையார் சென்று தம் ஊருக்குச் செல்ல எண்ணியிருப்பதாகவும்