பக்கம் எண் :

மடத்திற்கு வருவோர் 409

சுப்பிரமணிய தேசிகருடைய பூரணமான அன்பை வெளிப்படையாக
உணர்ந்த நான் என் தந்தையார் பிரிந்து செல்வதனால் அப்போது
வருத்தமடையவில்லை. அவர் போய் விட்டு மீட்டும் திரும்பி வந்து என்னோடு
இருந்து வாசஞ் செய்வாரென்ற நம்பிக்கை என் மனத்தில் உறுதியாயிற்று.
நாள்தோறும் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளே அதற்குக் காரணம்.
சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்புடையவராயிருந்ததோடு நான்
அவருடைய அன்புக்குப் பாத்திரமானவனென்பதை மடத்தில் உள்ளவர்களும்,
மடத்திற்கு வரும் பிரபுக்களும், வித்துவான்களும் தெரிந்து கொள்ளும்படியும்
செய்தார்.

பாடல்கள் முதலியன

யாரேனும் பெரிய மனிதர்கள் வந்தால் அவ்வப்போது புதிய புதிய
பாடல்களை இயற்றிச் சொல்லும்படி எங்களுக்குத் தேசிகர் கட்டளையிடுவார்.
நாங்கள் கற்றறிந்த நூல்களிலுள்ள பாடல்களைச் சொல்லிப் பொருளும்
சொல்லச் செய்வார். தொல்காப்பியப் பாயிர விருத்தி, இலக்கண விளக்கச்
சூறாவளி, சிவஞான பாஷியம் முதலியவற்றில் சிறந்த பாகங்களை என்னைக்
கொண்டு படிப்பித்து அவற்றை வந்தவர்களுக்குத் தாமே விளக்குவார். அவர்
சொல்லுவது சுவையுடையதாக இருக்கும். நல்ல பாடல்களிலுள்ள பகுதிகளுக்குப்
பதசாரம் சொல்வார். வந்தவர்கள் கேட்டு அவர் சொல்லும் முறையை வியந்து
பாராட்டுவார்கள். அத்தகைய சமயங்களில் எங்களுக்குப் புதிய புதிய
விஷயங்கள் தெரியவரும். இவ்வாறு நிகழும் காலங்களில் பெரும்பாலும்
படிக்கும் வேலையை நானே செய்து வருவேன். சில சமயங்களில் குமாரசாமித்
தம்பிரானும் படிப்பார்.

மடத்திற்கு வரும் வித்துவான்கள் சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டிப்
பாடல்களும், கீர்த்தனங்களும், சுலோகங்களும் இயற்றிக்கொண்டு வருவார்கள்.
அவற்றைத் தேசிகர்பால் சொல்லிப் பொருளும் விரிவாகக் கூறுவார்கள்.
அவ்வாறு உள்ளவற்றில் தமிழ்ப் பாடல்களையும், தமிழ்க் கீர்த்தனங்களையும்
நான் மீட்டும் படித்துக் காட்டுவேன். வேறு கனவான்கள் வருங்காலங்களில்
அப்பாட்டுக்களைச் சொல்வேன். இப்பழக்கத்தால் அப்பாட்டுக்களிற்
பெரும்பாலன எனக்குப் பாடமாயின. வடமொழி சுலோகங்களையும் தெலுங்குப்
பத்தியங்களையும் தெரிந்து கொண்டு சொல்பவர் சிலர் இருந்தனர்.

வருபவர்கள் பெறும் லாபம்

கனவான்கள் தேசிகரைப் பார்க்க வந்து சம்பாஷிக்கும் போதெல்லாம்
பெரும்பாலும் கல்விசம்பந்தமான பேச்சே நடை