பக்கம் எண் :

418என் சரித்திரம்

எனக்கும் அவருக்கும் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடை பெற்றது.
அவர் விரும்பியபடியே தனிப்பாடற்றிரட்டு இரண்டாம் பதிப்பில்
உபயோகித்துக் கொள்ளும்படி நான் பல பாடல்களை எழுதியனுப்பினேன்.
அவற்றுள் என் பாடல்களும் சில உண்டு. அவர் எல்லாவற்றையும் சேர்த்துப்
பதிப்பித்தார். அவர் என் பாடல்களை, “திருவாவடுதுறைச் சாமிநாத கவிராயர்
பாடியவை” என்று தலையிட்டு அச்சிட்டிருந்தார். பார்த்த சுப்பிரமணிய தேசிகர்
“சம்பிரதாயம் தெரியாமல் இப்படிப் போட்டிருக்கிறாரே!” என்று புன்முறுவல்
பூத்தார்: நாங்களும் சிரித்தோம்: “கவிராயர் வாள்” என்று நண்பர் சிலர்
என்னை அழைத்து நகைக்கலாயினர்.

அத்தியாயம்-68

திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும்
கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே
சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல்
மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும்
வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள்
கேள்வியுற்றோம்.

‘வித்வத்ஜன சேகரர்’

அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர
காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன
சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும்
வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை
வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள்
கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும்
ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி
மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது
கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.

கோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப
ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்