பக்கம் எண் :

422என் சரித்திரம்

அவ்வளவு தூரம் நடந்து வந்த சிரமத்தால் அம்முதியவருக்கு
மிகுதியான கோபம் உண்டாயிற்று. “சுருட்டுக் குடிப்பதற்குத் தனியான இடம்
வேண்டுமென்று கேட்டால் நீ சமீபத்தில் ஓர் இடத்தைக் காட்டாமல் இவ்வளவு
தூரம் அழைத்து வந்தாயே” என்று சொல்லித் தம் கையில் இருந்த தடியினால்
அவரை அடிக்க ஓங்கினார்.

இராமகிருஷ்ண பிள்ளை, “அட பாவி! நீர் சுருட்டுக் குடிப்பது
யாருக்கையா தெரியும்?” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓடி வந்து
விட்டார். கோவிந்த பிள்ளை தம் காரியத்தை முடித்துவிட்டு மீண்டு வந்தார்.
அவர் கோபம் அப்போதும் ஆறவில்லை. “என்னுடன் இவ்வளவு
முட்டாளையா அனுப்புவது? மிகவும் சிரமப்படுத்தி விட்டானே” என்று
வந்தவுடன் என்னைக் கேட்டார். முன்பே வந்த இராமகிருஷ்ண பிள்ளை
மூலமாக விஷயத்ைதை அறிந்து கொண்ட நான் ஒருவாறு அவருக்குச்
சமாதானம் சொன்னேன். ஏறுவெயிலில் மரமில்லாத சாலை வழியே நடந்து
வந்த சிரமத்தால் அவர் களைப்புற்றிருந்தார். அவர் கோபம் தணிந்ததாகத்
தெரியவில்லை.

அன்று பிற்பகலில் தேசிகரைப் பார்க்க அவர் வந்து இருந்த போது
தடியை எடுத்துக்கொண்டு நான்கு பக்கங்களையும் பார்த்தார். “என்ன
பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். “அந்தப் பயல் இருக்கிறானா என்றுதான்
பார்க்கிறேன்: ஸந்நிதானத்திடம் சொல்லி அவனைத் துரத்திவிடச்
சொல்கிறேன்” என்றார். நான் குறிப்பாக அவரை மௌனமாக இருக்கச்
செய்துவிட்டு இராமகிருஷ்ண பிள்ளையிடம் போய், “இவர் கண்ணிலே
படவேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தேன். பாவம்! அம்மாணாக்கர்
நெடுங்காலமாகத் தம் மனத்தில் அடக்கி வைத்திருந்த குறைகளையும்
எண்ணங்களையும் இந்த வைஷ்ணவரிடம் சொல்லி ஆற்றிக் கொள்ளலாமென்று
எவ்வளவோ ஆவலாக இருந்தார். அவர் இஷ்டம் நிறைவேறாமல் விபரீதமாக
முடிந்தது. தேசிகருக்கும் விஷயம் பிறகு தெரிந்தது.

மாணாக்கர்கள் கேட்ட கேள்வி

கோவிந்த பிள்ளை திருவாவடுதுறையில் சில நாட்கள் இருந்து
கம்பராமாயணம் சொல்லி வந்தார். வைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களைச்
சொல்லும்போது அவை புதியனவாக இருந்தன. மற்ற எங்களுக்கு அவரிடம்
மதிப்பு உண்டாகவில்லை. சில சமயங்களில் தம்பிரான்கள் அவரிடம் வேறு
நூல்களில் சந்தேகம் கேட்பவர்களைப் போலவே சில கேள்விகள் கேட்பார்கள்.
அவர் சொல்லத் தெரியாமல் மயங்குவார்; இல்லையெனின் வேறு எதை