பக்கம் எண் :

புது வீடு 431

தானத்தில் இங்கே சேர்ப்பிக்கும்படி உத்தரவாயிற்று” என்று
சொல்லிவிட்டுச் சென்றார்கள். அப்பால் பொன்னுசாமி செட்டியார் வந்தார்.
“தங்கள் வீட்டுச் செலவுக்கு அறுபது கலம் நெல் சேர்ப்பிக்கும்படி
ஸந்நிதானத்தில் உத்தரவாயிற்று. அயலூரிலிருந்து வந்த
விருந்தினர்களைப்போல நாள்தோறும் மடத்திலிருந்து சாமான்களைப் பெறுதல்
உசிதமாக இராதென்றும், இனி நிரந்தரமாக இங்கே மடத்தைச் சார்ந்தவர்களாக
இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய ஸந்நிதானம் திருவுள்ளம்
கொண்டுவிட்டது. மேற் செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி இந்தத்
தொகையையும் கொடுக்கும்படி உத்தரவாயிற்று” என்று சொல்லி என் கையில்
ஐம்பது ரூபாயைச் சேர்ப்பித்தார்.

நான் மெய்ம்மறந்து போனேன். என் தந்தையார் தம்முடைய
சிவபூஜைக்காக அப்பொழுது சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தார். நான்
பணத்தை அவர் கையிலே கொடுத்து இன்னது தான் சொல்வதென்று
தெரியாமல் நின்றேன். அவர் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“எல்லாம் பரமேசுவரன் திருவருள்” என்று சொல்லி நன்றியறிவு
ததும்பும் பார்வையோடு பேச முடியாமல் நின்றார்.

அன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய
தேசிகரைக் கண்டு நெல்லும் பணமும் கிடைத்ததைத் தெரிவித்து அளவற்ற
சந்தோஷமும் நன்றியறிவும் புலப்படச் சம்பாஷித்தனர். அப்போது தேசிகர்,
“இந்த மடத்தில் பெரிய காரியஸ்தர்களுக்கே மாசம் ஐந்து கலந்தான் சம்பளம்.
அதற்கு மேல் தங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க மனம் இருந்தும் வழக்கத்துக்கு
விரோதமாக ஒரு காரியம் செய்தால் அநாவசியமான வம்புக்கு
இடமாகுமோயன்று அப்படிச் செய்யவில்லை. இதைக் கொண்டு உசிதமான
செலவு செய்து வந்தால் வேண்டியவற்றை அப்போதப்போது அனுப்புகிறோம்;
கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னார்.

தம்பிரான்களின் திருப்தி

நானும் என் தந்தையாரும் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கடம் தீர்ந்தது.
ஸ்திரமான இடமும், நிலையான வருவாயும், பெரிய இடத்துச் சார்பும்
கிடைத்தன. நான் திருவாவடுதுறை மனிதனாகி விட்டேன். என்னிடம் படித்து
வந்த மாணாக்கர்களெல்லாம் மிக்க திருப்தியை அடைந்தார்கள்.
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவனென்பதை உறுதிப்படுத்தியதுபோல என்
புது வாழ்க்கை அமைந்