பக்கம் எண் :

438என் சரித்திரம்

வரவேண்டும்” என்று விண்ணப்பம் செய்து கொண்டார். அதே
சமயமாகிய ஈசுவர வருஷம் தை மாதத்தில் மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர்
ஆலயத்துக்கு அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் மகா கும்பாபிஷேகம்
நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அக்கும்பாபிஷேகத்துக்கு வந்து சிறப்பிக்க
வேண்டுமென்று அவர்களும் சுப்பிரமணிய தேசிகரைக் கேட்டுக் கொண்டனர்.

யாத்திரைக்கு ஏற்பாடு

தம்பிரானும், தன வைசியர்களும் செய்துகொண்ட வேண்டுகோளை
ஏற்றுத் தேசிகர் மதுரைக் கும்பாபிஷேகத்துக்குப் போய் அங்கிருந்து
தக்ஷிணத்தில் யாத்திரை செய்து செவந்திபுரத்திற்கும் போகலாமென்று
நிச்சயித்தனர். அதற்குத் தக்கபடி ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பெற்றன.

போகும் வழியில் ஆங்காங்குள்ள கனவான்களுக்குத் திருமுகங்கள்
அனுப்பப்பட்டன. சிலர் திருவாவடுதுறைக்கே வந்து சுப்பிரமணிய தேசிகரது
தக்ஷிண யாத்திரையில் கலந்து கொள்ள எண்ணினர். கல்லிடைக்
குறிச்சியிலிருந்த சின்னப்பட்டம் ஸ்ரீ நமசிவாய தேசிகருக்கு, மதுரையில் வந்து
சேர்ந்து கொள்ளும்படி சுப்பிரமணிய தேசிகர் திருமுகம் அனுப்பினார்.
யாத்திரைக் காலத்தில் வழியில் வேண்டிய சௌகரியங்களுக்குரிய
பொருள்களும் உடன் வருவதற்குரிய பரிவாரங்களுக்கு வேண்டிய வசதிகளும்
அமைக்கப்பெற்றன.

தந்தையாரிடம் விடை பெறுதல்

“நாம் தக்ஷிண யாத்திரை செய்யப் போகிறோம். அங்கங்கே பல
பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சல்லாபம் செய்வார்கள். நீரும்
உடன் வரவேண்டும். மகா வைத்தியநாதையரும் அவர் சகோதரரும் மதுரைக்கு
வந்து சேர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். நீர் நம்முடன் வருவதில் உம்முடன்
தாயார் தகப்பனாருக்கு வருத்தம் இராதே? அவர்களை மிகவும்
ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளும்படி இங்கே உள்ளவர்களிடம்
சொல்லிப் போவோம்” என்று தேசிகர் என்னை நோக்கிக் கூறினார். எனக்குப்
புதிய ஊர்களையும் புதிய மனிதர்களையும் பார்ப்பதற்கு அளவற்ற ஆவல்
இருந்தது. யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறும் போது,
“நம்மையும் உடனழைத்துச் செல்வார்களோ, மாட்டார்களோ” என்ற சந்தேகம்
எனக்கு உண்டு. தேசிகர் சொன்ன வார்த்தைகளால் அந்தச் சந்தேகம்
நீங்கியதுடன்