பக்கம் எண் :

நானே உதாரணம் 443

கொண்டு மதுரைக்கு அருகிலுள்ள திருப்பூவணத்தை அடைந்து அங்கே
பரிவாரங்களுடன் தங்கினார். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட
காலங்களிலும், தேவாரம், தலபுராணங்கள் முதலியவற்றைப் படித்த
காலங்களிலும் பல சிவஸ்தலங்களுடைய வரலாறுகளை நான் அறிந்திருந்தேன்.
பிள்ளையவர்களுக்கும் அவரோடு பழகியவர்களுக்கும் சிவஸ்தல தரிசனத்தில்
ஆவல் உண்டு. நான் அத்தகைய சமூகத்திற் பழகியவனாதலின் இடையிடையே
சிவ ஸ்தல தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ஸ்தலங்களைப் பற்றிய
செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்வதோடு புதிய விஷயங்களையும்
விசாரித்துத் தெரிந்து கொள்வேன்.

பாண்டிநாடு புகுதல்

சோழ நாட்டைக் கடந்து பாண்டிநாட்டெல்லையில் புகுந்தவுடன்
சுப்பிரமணிய தேசிகர், “இது வரையில் சோழ நாட்டைத் தான் நீர்
பார்த்திருக்கிறீர் இனிமேல் பாண்டி நாட்டின் வளத்தைக் காணலாம்” என்றார்.
அப்படிச் சொல்லும்போது அவர் குரலில் ஓர் உத்ஸாகம் இருந்தது. தம் சொந்த
நாடாகிய பாண்டி நாட்டை அடையும்போது அவருக்கு உத்ஸாகம் இருப்பது
இயல்பு தானே?

திருவிளையாடற் புராணத்தைப் பல முறை படித்தும் பிரசங்கம் செய்தும்
ஈடுபட்ட நான் பாண்டி நாட்டின் பெருமையை நன்றாக அறிந்திருந்தேன்.
அந்நாட்டு எல்லையை அணுகிவிட்டோமென்பதைக் கேட்டவுடன் எனக்கும்
அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. திருப்பூவணத்திற்கு வந்தபோது அந்த
ஸ்தலத்தையும் வைகை நதியையும் கண்டு என் கண்கள் குளிர்ந்தன.
பொன்னனையாளெனும் கணிகையினுடைய முத்தத்தை ஏற்றுக் கொண்டு
கன்னத்தில் தழும்புற்ற பெருமானைத் தரிசித்தேன். மதுரைத் தலத்தைக் காண
வேண்டுமென்ற விருப்பம் வர வர மிகுதியாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர் திருப்பூவணத்தில் தங்கியிருப்பதை அறிந்து
மதுரையில் இருந்த கனவான்களும், மதுரை ஆலயத் திருப்பணிச்
செட்டியார்களும் அங்கே வந்து தேசிகரைக் கண்டு வரவேற்று முகமன்
கூறிவிட்டுச் சென்றார்கள்.

மதுரை செல்லுதல்

பிறகு தேசிகர் அங்கிருந்து புறப்பட்டு ஒருநாள் காலையில் மதுரையைச்
சார்ந்த வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மேல் கரையிலுள்ள கோயிலில்
பரிவாரங்களுடன் தங்கினார். அவ்விடத்தில் ஆதிமூலம்பிள்ளை என்பவர்
பலவிதமான அலங்காரங்கள் செய்து